ஸ்ரீதேவியின் புகார்: சமரசத்துக்கு 'புலி' படக்குழு முயற்சி!

'புலி' படத்துக்காக ஸ்ரீதேவி அளித்துள்ள புகார் குறித்து சமரசம் பேசி முடிக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புலி'.
 
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்தார்கள். படம் வெளியான முதல் நாளே மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. 

முதல் நாளை விடுத்து அடுத்த நாள் முதலே வசூலும் இறங்கத் தொடங்கியது.
சில தினங்களுக்கு முன்னர், இப்படத்தில் தனக்கு 50 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக ஸ்ரீதேவி புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் விசாரித்த போது, அப்படி ஒரு புகார் எங்களுக்கு வரவில்லை என்றார்கள். ஸ்ரீதேவி எங்கு புகார் அளித்தார் என்பதில் குழப்பம் நீடித்தது. 

இந்நிலையில் 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமீன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஸ்ரீதேவி அவர்களின் புகார் குறித்து தெளிவுபடுத்துவோம். 

எனக்கு நடைபெறவிருந்த அறுவை சிகிச்சையை தள்ளி வைத்துவிட்டு, சென்னையில் பி.டி.செல்வகுமாரை சந்திக்க இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் 'புலி' தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீதேவி புகார் அளித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings