கிராமப்புறங்களில் மின் வசதியின்றி தவிக்கும் மக்களுக்கு மெழுகுவர்த்தி வழங்கிடவேண்டும் என விருத்தாசலம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு நாட்களாக இடைவிடாமல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
கடந்த 9-ம் தேதி பெய்த மழை நீர் வடியாத நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கம்மாபுரம், சி. கீரனூர், விளக்கப்பாடி, சாத்தமங்கலம், ஓட்டிமேடு, பெருந்துறை, பெரியகோட்டிமுளை, சின்னகோட்டிமுளை
உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழையினால் கிராம மற்றும் நகர பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
மேலும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், வீடுகளில் போதிய வெளிச்சம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடைகளில் மெழுகுவர்த்தி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் ஒரு மெழுகுவர்த்தி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே அரசு பல்வேறு உதவிகளை செய்துவரும் நிலையில், கிராமப்புறங்களில் மின் வசதியின்றி தவிக்கும் மக்களுக்கு மெழுகுவர்த்தி வழங்கிடவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.