தமிழகத்தில் பெய்து வருகின்ற கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது.
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டி வருகின்றது. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களை குற்றாலத்தில் கழிப்பதற்காக வந்திருப்பவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.