முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் தலையெழுத்து இன்னும் சரியாக ஏழு நாட்களில் முடிவாகிவிடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
எழுவரும் விடுதலையாவர்களா அல்லது தங்ளது வாழ்நாளின் எஞ்சிய நாட்களை காராக்ரகத்திலேயே கழிக்கப் போகிறார்களா என்பது வரும் டிசம்பர் 2ம் தேதிக்குள் முடிவாகப் போகிறது. காரணம் மிகவும் எளிமையானது.
இந்த எழுவரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி முடிந்து விட்டது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இம்மனுக்களை விசாரித்தது. அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி ஹெச் எல் தத்து டிசம்பர் 2 ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
ஆகவே அதற்கு முன்பாக தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு அளிக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது.
இந்த அமர்வின் மற்ற நீதிபதிகள் ஃபகீர் முகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோஹர் சப்ரே மற்றும் உதய் உமேஷ் லலித்.
ஆகவே ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இந்த ஏழு பேரின் - முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார்
மற்றும் ரவிச்சந்திரன் - விதி நீதிபதி தத்து தலைமையிலான அமர்வின் கையில் தான் தற்போது உள்ளது. இந்த வழக்குப் பற்றிய ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்...
2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தள்ளுபடி செய்து விடவே
அவர்கள் மூவரையும் 2011 ம் ஆண்டு செப்டம்பர் 9 ம் தேதி வேலூர் சிறையில் தூக்கில் போட ஏற்பாடுகள் துவங்கின.
ஆனால் அதிர்ஷ்டவசமாக சென்னை உயர்நீதிமன்றம் இம் மூவரையும் தூக்கில் போட ஆகஸ்ட் 29 ம் தேதி தடை விதித்தது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மொத்தமுள்ள நால்வரில் நளினியின் கருணை மனு 2000 ம் ஆண்டில் அப்போதய தமிழக ஆளுநர் ஃபாத்திமா ஃபீவி யால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
மற்ற மூவரின் மனுக்களை அவர் நிராகரித்தார். இதனால் குடியரசுத் தலைவரிடம் மூவரும் தாக்கல் செய்த கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் கழித்து தள்ளுபடி செய்யப் பட்டன.
இந்த கால தாமதத்தைக் காரணம் காட்டியும் சென்னை உயர்நீதி மன்றம் மூவரின் தூக்கிற்கு தடை விதித்தது.
பின்னர் இதில் எழுந்த பல்வேறு அரசியல் சாசன பிரச்சனைகளின் காரணமாக இவ் வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது.
2014 ம் ஆண்டு பிப்ரவரி 18 ம் தேதி அப்போதய தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு இம் மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.
மேலும் ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசுகள் உரிய முடிவுகள் எடுக்கலாம் என்றும் கூறியது.
அது மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முந்தய காலம். இலங்கைத் தமிழர்கள் மீது அளப்பரிய அன்பும், கருணையும்,
பாசமும் கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மறுநாளே தமிழக சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
‘ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும், உச்ச நீதிமன்ற வழி காட்டுதலின் படி விடுதலை செய்ய எனது தலைமையில் இன்று காலையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்து விட்டது.
இவர்கள் மத்திய அரசு சட்டங்களின் படியும், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மூலமாகவும் விசாரிக்கப்பட்டதால் இந்த விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் உரிய முடிவெடுக்குமாறு மத்திய அரசைக் கோருகிறோம்.
இந்த மூன்று நாட்களுக்குள் இவர்களின் விடுதலையை மத்திய அரசு உறுதி செய்யா விட்டால் எனது தலைமையிலான அரசு இந்த ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்துவிடும்,' என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பால் கடும் கோபமடைந்த அப்போதய, மன்மோஹன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், பிப்ரவரி 21 ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் ஒரு அவசர பொது நல மனுவைத் தாக்கல் செய்தது.
இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் இந்த எழுவரையும் விடுவிக்கும் தமிழக அரசின் உத்திரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது விசாரணையை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது.
இதன்படி ஏப்ரல் 2014 ல் வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தான் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தததை உறுதி செய்ததுடன்,
இந்த எழுவரின் விடுதலையில் பல்வேறு விதமான அரசியல் சாசன மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவர்,
ஆளுநர் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் அதிகார வரம்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டியிருப்பதால் விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாகத் தெரிவித்து விட்டது.
ஆனால் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணை 2015 ம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் பின் ஜூலையில்தான் துவங்கியது.
இதில் முக்கியமாக ஏழு விவகாரங்களை சதாசிவம் அமர்வு அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பியிருந்தது.
அதில் முக்கியமான விஷயங்கள்:
(அ) குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ அல்லது உச்ச நீதிமன்றமோ அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியிருக்கும் ஷரத்துக்கள் 72, 161 மற்றும் 32 ஏ ஆகியவற்றின் கீழ் ஒருவருக்கான தண்டனையை ஒரு முறை குறைத்து விட்டால்,
மீண்டும் அதே நபருக்கு மேலும் தண்டனையை குறைக்கும் அதிகாரம் அரசு நிருவாகத்துக்கு (அதாவது இந்த விஷயத்தில் ஜெயலலிதா அரசுக்கு) இருக்கிறதா?
(ஆ) ஒருமுறை மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டவர்களை சிறப்பு பிரிவினராக கருதி, அவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்குவதைத் தடுக்கும் விதமாக,
அவர்கள் தங்களது விடுதலையை 14 ஆண்டுகள் கழித்தும் பெற முடியாது. அவர்கள் தங்களது வாழ்வின் எஞ்சிய காலங்களை சிறையில் தான் கழிக்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
(இ) உரிய அரசாங்கம் என்பது இந்த விவகாரத்தில் எது? மாநில அரசா? மத்திய அரசா?
(ஈ) மத்திய அரசு சட்டங்களான தடா போன்றவற்றால் (ராஜீவ் கொலையாளிகளைத் தண்டிக்கப் பயன்படுத்தப் பட்ட சட்டம்) தண்டிக்கப் பட்டவர்களையும்,
மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ போன்றவை விசாரணை நடத்திய வழக்குகளில் தண்டிக்கப் பட்டவர்களையும் விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா?
(உ) இத்தகையோரை விடுதலை செய்யும் போது மாநில அரசு மத்திய அரசை கலந்தாலோசிப்பது என்பதன் தன்மை என்ன?
அதாவது மத்திய அரசின் சிபாரிசுகள், முடிவுகள் என்பவை மாநில அரசின் மீது தட்டிக் கழிக்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்படுத்தக் கூடியவையா?
அல்லது அவை வெறும் சிபாரிசுகள் மட்டும்தானா? இந்த ஏழு கேள்விகளுக்கும் நிரந்தர விடை தேடும் விதமாகவே,
தலைமை நீதிபதி ஹெச் எல் தத்து தலைமையிலான அமர்வு இந்தாண்டு ஜூலையில் தனது விசாரணையை துவங்கி ஆகஸ்ட் 12 ம் தேதி விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்தது.
இந்த வழக்கு விசாரணையில் அனைத்து மாநில அரசுகளையும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உச்ச நீதி மன்றம் பணித்தது.
இதன்படி மனுக்களைத் தாக்கல் செய்த பெரும்பாலான மாநிலங்கள் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும்
அதிகாரம் - சம்மந்தப்படவர்கள் மத்திய சட்டங்களின் கீழ் கைது செய்யப் பட்டிருந்தாலும், சிபிஐ போன்றவற்றால் விசாரிக்கப் பட்டிருந்தாலும் - தங்களுக்கு உண்டென்று வாதிட்டன.
ஏனெனில் அரசியல் சாசனத்தின் படி காவல்துறையும், சிறைத் துறையும் மாநிலப் பட்டியலில் உள்ளவை என்று அவர்கள் கூறுகின்றனர்.