டாக்டர் கவ்சல்யா தாம்பத்தியம் தொடரில் பலவித பிரச்சனைகளை பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிக தேவையானதும் கூட !
வாசகி ஒருவர் நீண்ட மடல் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார். அதன் மொத்தம் உள்ளடக்கம் இது... எனது கணவரின் வயது 46, மது, புகை பழக்கம் உள்ளவர்.
6 மாதங்களாக தாம்பத்திய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார். முக்கியமான நேரத்தில் இயங்க முடிவதில்லை என தொடர்ந்தவர் இதற்கு வயாகரா உபயோகிக்கலாமா ?
அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா ? என கேட்டிருந்தார். அவருக்கு சொன்ன பதில் பிறருக்கும் தேவைப்படலாம் என்பதால் கொஞ்சம் விரிவாக இங்கே பகிர்கிறேன்.
இன்பம் எங்கே...? இன்றைய இயந்திர உலகில் தாம்பத்ய இன்பம் என்பது வேறெங்கோ இருப்பதை போலவும் அதை சுலபமாக சீக்கிரமாக அடைய மருந்து மாத்திரைகள் போட்டுக் கொண்டால் போதும் என்பதே சிலரது முடிவு..
ஆனால் உடல் தயார் நிலையில் இருந்தால் மட்டும், அங்கே உறவு நடந்து விடுவதில்லை, (இருவர்) மனமும் ஒத்துழைக்க வேண்டும். இப்போதெல்லாம் ஆண்கள் 30-40 வயதிலேயே ஆர்வம் குன்றி விடுகிறார்கள்.
ஆர்வம் என்று கூறுவதை விட இயலாமை என்பதே சரி. இதற்கு மன சார்ந்த உடல் ரீதியிலான காரணங்கள் இருக்கலாம். அவை என்ன என்று கவனித்து சரி செய்ய வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றை நாடுவது சரியல்ல.
செயற்கை தூண்டுதல்கள் அந்த நேரம் சுவைக்கலாம் தொடர்ந்து அவை எடுத்துக்கொள்ளப்பட்டால் சாதாரண அணைப்பு கூட, அந்த மருந்து இல்லாமல் நடவாது என்றாகிவிட்டால்...?
உறுப்பு செயல்படும் விதம் ஆணுக்கு உடலுறவு பற்றிய எண்ணமோ, செயலோ தேவைப்படும் போது மட்டும் விரிந்து நீளக் கூடிய தன்மை கொண்டதாக உறுப்பின் அமைப்பு இருக்கிறது.
விரியவோ சுருங்கவோ கூடிய இத்தன்மையை மூளையில் உள்ள சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம் என்ற பகுதி பார்த்துக் கொள்ளும். இரண்டு விதமான நரம்பு அமைப்புகளில் ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டாலும் பிரச்சனை தான்.
பெண்ணை நினைத்ததும் இந்த நரம்பு மண்டலம் உஷாராகி நியுரோடிரான்ஸ் மீட்டர்களை வெளியிடும், அடுத்து நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல் கோலைன், டோப்பாமைன் போன்றவை சுரக்க ஆரம்பிக்கின்றன. இவை ஆணுருப்புக்குள் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களை பெரிதாக்குகின்றன.
அதிகமான ரத்தம் அங்கே சென்று அங்கிருக்கும் பஞ்சு போன்ற அறைகளை ரத்தத்தால் நிரப்புகின்றன. அறைகள் பெரிதானதும் ரத்தக்குழாய்கள் மூடிவிடுவதால் ரத்தம் தேங்கி உறுப்பு நீண்டு பெரிதாகி கடினமாகிறது.
உடலுறவு நிகழ்ந்து முடிந்ததும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு கொண்டு வர மூளையின் இரண்டாவது நரம்பு மண்டலம் உடனே செயல்பட தொடங்குகிறது.
இறுக்கத்தை குறைத்து விரிந்திருக்கும் தன்மையை தடுத்து விடும். வயாகராவின் வேலை : வயாகரா என்பது சில்டினாபில் என்கிற ஒரு கெமிக்கல். நைட்ரிக் ஆக்சைடு செய்யக்கூடிய வேலையை இதுவும் செய்யும்.
ரத்தக்குழாய்களை பெரிதாக்கி அதிக ரத்தத்தை செலுத்துவதும் அப்படியே இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை செயலற்றதாக ஆக்குவதும் இதன் வேலை, அதாவது விறைப்பு தன்மையை ! இதனால் உறுப்பு நீண்ட நேரம் விரிந்தே இருக்கும்.
மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை கொஞ்ச நேரம் தடுத்து வைக்கிறது வயாகரா. ஆனால் இந்த நிலைக்கு வருவதற்கு முன் மனதால் செக்சை நினைக்க வேண்டும்.
மனம் ஒத்துழைக்காமல் வயாகராவை மட்டும் போட்டு கொண்டால் எந்தவித பிரயோசனமும் இல்லை. ஆரோக்கியமான மனதும் உடம்பும் அமைய பெற்றவர்களுக்கு எந்த வித செயற்கையான தூண்டுதலும் தேவையில்லை.
அதே சமயம் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறை மனதிலா உடலிலா என்பது தெரியாமல் வயாகரா போட்டு கொண்டால் சரியாகி விடும் என்பது முற்றிலும் தவறு.
இந்த பெண்ணின் கணவரை பொருத்த வரை அவரது புகை, மது பழக்க வழக்கங்கள் அவருக்கு தாம்பத்திய ஆர்வத்தை குறைத்ததோடு மட்டு மல்லாமல் உறுப்பு எழுச்சியையும் முடக்கி போட்டு விட்டது.
அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். மற்றொன்று சர்க்கரை நோய் இது ஆண்மை குறைவை ஏற்படுத்தும்.
எனவே குடி, புகை, சர்க்கரை நோய் இவற்றின் பாதிப்பை குறைப்பதில் அக்கறை எடுக்க வேண்டுமே தவிர வயாகரா போன்ற வற்றையும், இத்தனை நாளில் குணப்படுத்து கிறோம் என்ற விளம்பரங்கள் பின்னேயும் செல்வதும் சரியல்ல...
பெண்களுக்கும் வயாகரா ? இந்த வயாகரா பெண்களுக்காகவும், கண்டு பிடிக்கப் பட்டுள்ளது ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு மருந்து கம்பெனி பிளிபான்செரின் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.
உறவில் முழு திருப்தியை அளிக்க வல்லது என்றும் இதனை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
நேரடியாக மூளையை சென்றடைந்து தேவையான கெமிக்கல் களை மூளையில் அதிக அளவில் சுரக்க வைத்து ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆனால் பெண்கள் இது போன்றவற்றை உபயோகிக்கும் போது வேறு விதமான சிரமங்களை அனுபவிக்க வேண்டும்.
மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆண், பெண் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை, அனுமதி இன்றி எதையும் உட்கொள்வதை தவிர்தல் நலம்.
வயாகரா தீர்வு இல்லை ? தாம்பத்திய உறவு பற்றிய விருப்பம், ஆர்வம் இல்லாதவர்களுக்கு, சர்க்கரை நோய் இருக்கிறதா என சோதனை செய்வது முக்கியம்.
இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். சர்க்கரை நோயை மருந்து மாத்திரை யினால் கட்டுக்குள் வைக்க வில்லை என்றால் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டத்தை இந்நோய் இயங்கவி டாமல் தடுத்துவிடும் அல்லது பாதிக்கும்.
இந்நிலையில் எவ்வளவு தான் செக்ஸ் தூண்டுதலை வெளியே இருந்து ஏற்படுத்தினாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. இத்தகை யவர்களுக்கு வயாகரா தீர்வு இல்லை.
(ஒருவேளை ஈடுபட்டாலும் முழுமை பெறாது.) ஆணிடம் இருந்து விந்தணுக்கள் வெளியேறுவதை போல் தோன்றினாலும் பெண்ணை அடைவதற்கு பதிலாக அவர்களின் சிறு நீர்பையினுள் சென்று விடும் !
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை, குடி பழக்கம் இருப்பவர் களின் ரத்த குழாய்கள் அதிக அளவு சுருங்கும். அதோடு ஆண் உறுப்புக்கு செல்லும் ரத்த குழாய்களும் சுருங்கும் என்பதால் அங்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிக்கும்.
இதனால் எழுச்சியின்மை ஏற்படும். ஆர்வம் குறையும். மேலும் இம்மாத் திரையை உடலுறவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டு விட வேண்டும்.
அந்த நேரத்திற் குள்ளாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை எட்டிவிடும். கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களுடன் உட்கொள்ள பட்டால் ரத்தத்தில் உறிஞ்சப்படுவது தாமதமாகும்.
முக்கியமாக இதய நோய்க்கு எடுத்து கொள்ளப்படும் மாத்திரைகளோடு (ISMN /ISDN) வயாகரா உட்கொள்ளப் பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தாகலாம்.
சுலபமான வழி - சூரிய குளியல் பாலியல் ஆர்வத்தை தூண்ட ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் உதவுகிறது.
இந்த ஹார்மோன் சுரக்க வைட்டமின் "டி" அதிக அளவில் தேவைப்படுகிறது. வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது.
ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் எடுத்தாலே போதும் என்று ஆஸ்திரியா ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். அப்போது டெஸ்டோ டெரோன் 69 சதவீதம் அதிகரிக்கிறது.
இறுதியாக ஒரு முக்கிய தகவல் உடல் ரீதியினாலான குறைபாடுகள் எதற்கும் சரியாக சிகிச்சை பெறாமலோ மது, புகை பழக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ
நாளடைவில் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களும் சுருங்கும். இதயப் பாதிப்பு ஏற்படும். 100 சர்க்கரை நோயாளிகளில் 50 பேர் ஆண்மை குறைவுக்கு ஆளாகிறார்கள்.
இதில் 40 % பேர் மாரடைப்புக் குள்ளாகிறார்கள். இத்தகைய ஆபத்தை முதலில் சரிப்படுத்த முயல வேண்டும். அளவான சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவை மிக அவசியம். இதெல்லாம் முறையான பழக்கத்திற்கு வந்த பிறகே உடல் தயாராகும்.
அதனுடன் மனமும்...!! மனது நினைக்க நினைக்க அந்நினைவுகள் மூளையின் நரம்பு மண்டலத்தை மெல்ல அங்கே பிறக்கும் இசை அதிர்வுகள், உடலெங்கும் பரவி வியாபித்து ஆனந்திக்க வைக்கும். இனியும் வயாகரா போன்றவை பற்றிய சிந்தனை வேண்டுமா ?