இளைஞர்களின் தொழில் முனைவு திறனை ஊக்கவிக்க 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம் வரும் ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மக்களுக்காக உரையாற்றினார். இது 2015-ம் ஆண்டுக்கான பிரதமரின் கடைசி வானொலி உரை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பேசும்போது, "புதுவருடம் மகிழ்ச்சியானதாகவும் வளர்ச்சியைத் தருவதாகவும் எல்லோருக்கும் அமைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய நான், சமூகத்தின் அடிதட்டில் இருக்கும் இளைஞர்களின் தொழில் முனைவு திறனை ஊக்கவிக்கும் வகையில் 'ஸ்டார்ட் அப் இந்தியா,
ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தேன். அதற்கான செயலாக்கத் திட்டம் தயாராகி வருகிறது எனக் கூறியிருந்தேன்.
தற்போது அந்த செயற் திட்டம் தயாராகிவிட்டது. வரும் ஜனவரி 16-ம் தேதி 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’ செயற்திட்டம் வெளியிடப்படும்.
இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏழை இளைஞர்கள் மிகுந்த பயனடைவர்.
நாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்களுடன் இத்திட்டமானது இணைக்கப்படும்.
இத்திட்டம் மூலம் தொழில் முனையும் இளைஞர்களுக்கு வங்கிக் கடன் பெற உதவி செய்யப்படும். உற்பத்தித் துறை, சேவை துறை அல்லது விவசாயம் என அந்தத் துறையாக இருந்தாலும் புத்தாக்கச் சிந்தனை கொண்ட தொழில் முனையும்
இளைஞர்களுக்கு 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம் ஓர் அரிய வாய்ப்பாகும். புதிய சிந்தனைகள் இல்லாமல் உலகம் முன்னேறிச் செல்ல முடியாது" என்றார்.
இளைஞர் திருவிழாவுக்கு யோசனைகள்..
பிரதமர் மேலும் கூறும்போது, "விவேகானந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டம், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 5 நாட்கள் நடைபெற உள்ளது. இளைஞர் திருவிழாவுக்காக யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர்களின் வசதிக்காக, நரேந்திர மோடி மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர் திருவிழாவில், நாடெங்குமிலும் இருந்து 10000 இளைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்" என்றார்.