வரலாறு காணாதமழை சென்னையில் பெருந்துயரத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் செயற்கை சுவாசம் பொருத்த முடியாமல் போனதால் 18 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒட்டுமொத்த சென்னை நகரமே வெள்ளத்தால் மூழ்கியது. சென்னையில் பல பகுதிகளில் பயங்கர வெள்ளம் சூழ்ந்தது.
கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன், ஏ.டி.எம்., பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் என எதுவுமே இயங்காமல் சென்னை மாநகரமே தனித் தீவானது. சென்னை புறநகர்கள் அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கிப் போய்விட்டன.
இந்த நிலையில் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள நந்தம்பாக்கத்தில் இயங்கி வந்த மியாட் மருத்துவமனையில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த மருத்துவமனை முழுவதுமாக செயல்பட முடியாமல் போனது.
ஏற்கனவே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு ஜெனரேட்டர்களை இயக்க முடியாமல் போனது. இதனால் அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த 18 நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்க முடியவில்லை.
இதனால் அந்த 18 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் பல லட்சம் ரூபாய் பணத்தை கறாராக கறப்பதில் குறியாக இருந்ததே தவிர; நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முன்வரவில்லை;
இதை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டவும் செய்கிறது என்று குமுறுகின்றனர் உயிரிழந்தோரின் உறவினர்கள்