2 நாள் சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பாரீஸில் நடைபெற்ற பருவ நிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி இன்று காலை இந்தியா வந்து சேர்ந்தார். பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உச்சி மாநாடு, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. 11–ந் தேதி வரை, 12 நாட்கள் இம்மாநாடு நடக்கிறது.
 
உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்துவதே இம்மாநாட்டின் நோக்கம். இதுதொடர்பான ஒப்பந்தம், மாநாட்டில் உருவாக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், இத்தகைய ஒப்பந்தம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

நேற்று மாநாட்டின் தொடக்க விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்காக,இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பாரீஸ் சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்,

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்நாயுடு, ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானி, மங்கோலிய பிரதமர் ஷாகியஜின் எல்பெக்டோர்ஜ், இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். 

பின்னர், பிரான்சு அதிபர் ஹேலண்டேவுடன் இணைந்து சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை துவங்கி வைத்த மோடி, இந்தியா சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித்தொகையாக வழங்குவதாக உறுதி அளித்தார்.

தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இந்திய நேரப்படி பின்னிரவு 2.30 மணியளவில் பாரீஸில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட மோடி இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். 

பருவ நிலை உச்சி மாநாட்டில் பருவ நிலையை மட்டுபடுத்துவதில் இந்தியா உறுதியான அர்பணிப்புடன் இருப்பதை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டார். என்று பிரதமர் அலுவலக டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings