பெங்களூருவில், கார் வாங்கி தருவதாக கூறி நீதிபதியிடம் ‘ஆன்–லைன்‘ மூலம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டு தம்பதி உள்பட 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ரூ.3½ லட்சம் பெங்களூருவில் வசித்து வரும் நீதிபதி ஒருவர் குறைந்த விலைக்கு விலையுயர்ந்த கார்கள் விற்பனை செய்யப் படுவது தொடர்பான இணைய தளத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.
பின்னர், அவர் ‘ஆன்–லைன்‘ மூலமாக விளம்பரம் செய்திருந்தவர்களை தொடர்பு கொண்டார். அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த தம்பதி இணைய தளத்தில் விளம்பரம் கொடுத்திருப்பது தெரிய வந்தது.
அவர்கள், ‘ரூ.3½ லட்சம் ரொக்கத்தை ‘ஆன்–லைன்‘ மூலமாக எங்கள் வங்கி கணக்கில் செலுத்தினால் நீங்கள் விரும்பிய கார் உங்களுக்கு கிடைக்கும்‘ என நீதிபதியிடம் கூறியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய நீதிபதி ‘ஆன்லைன்‘ மூலமாக அவர்களின் வங்கி கணக்கில் ரூ.3½ லட்சம் ரொக்கப் பணத்தை போட்டுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு கார் கிடைக்க வில்லை.
தம்பதி உள்பட 6 பேர் கைது இது குறித்து நீதிபதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நீதிபதியிடம் மோசடி செய்ததாக நைஜீரியா நாட்டை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள், நைஜீரியாவை சேர்ந்த போலாஜி லாவல், அவருடைய மனைவி அவரில், இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட சிக்க ஒகேபாலா,
ஒகிஜி கூலிங், ஓஜா மற்றும் கிறிஸ்டியன் ஒபினா என்பது தெரிய வந்தது. கைதானவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.