சவுதியில் கொடுமைக்கு ஆளான 3 கேரள இளைஞர்கள் மீட்பு !

சவுதி அரேபியாவில் பணிக்குச் சென்ற இடத்தில் கொடுமைக்குள்ளான 3 கேரள இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு திருவனந்தபுரம் வந்தடைந்தனர். 
சவுதி அரேபியாவில் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் முதலாளியால் பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டு மரக்கட்டையால் கொடூரமாக தாக்கும் வீடியோ வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து ஆழப்புழாவைச் சேர்ந்த அந்த இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறைக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்தது. 

இந்நிலையில் வெளியுறவுத்துறை முயற்சியினால் 3 இளைஞர்களும், மீட்கப்பட்டதாக அத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, "3 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். இளைஞர்கள் 3 பேரும் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை வந்தடைந்தனர். 

மீட்கப்பட்ட இளைஞர் அபிலாஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நான் இங்கு வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி இருந்தேன். சவுதியில் கிடைக்கும் வேலை மூலம் கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணத்தோடு அங்கு சென்றேன். 

ஆனால் அங்கு நடந்தது வேறு. இப்போது நண்பர்களையும் உறவினர்களையும் கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
Tags:
Privacy and cookie settings