இன்ஜினில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயில் நெல்லைக்கு நேற்று காலை 3 மணி நேரம் தாமதமாக வந்தது.
நாகர்கோவி லில் இருந்து தினமும் கோவைக்கு பயணிகள் ரயில் நெல்லை வழியாக இயக்கப் பட்டு வருகிறது.
இந்த ரயில் நெல்லைக்கு காலை 9.05 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்லும்.
இந்த ரயிலில் மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம், கூட்டமாக செல்வது வழக்கம்.
நேற்று காலை நாகர்கோவி லில் இருந்து புறப்பட்ட ரயில், வள்ளி யூருக்கும் & நாங்குநேரிக்கும் இடையே தளபதி சமுத்திரம் அருகே வந்த போது இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் திடீரென நின்றது.
ரயில் டிரைவர் மற்றும் பணியாளர் ரயிலை இயக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து, நாகர்கோவிலில் இருந்து மாற்று இன்ஜின் வரவழைக்கப் பட்டது.
இதனால் நடுக்காட்டில் பயணிகள் பரிதவித்தனர். மாற்று இன்ஜின் பொருத்தப் பட்டதை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் தாமதமாக அங்கிருந்து ரயில் புறப்பட்டு சுமார் 11.40 மணிக்கு நெல்லை வந்தது.
இதனால் நெல்லையில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
ரயில் நடுக்காட்டில் பழுதானதால், நாகர்கோவில் சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரசும் நாங்குநேரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.