இணையத்திலும், நட்பு ஊடகங்களிலும் வெறும் மீமீக்களாகவும், பதிவுகளாவும் மட்டும் இருந்து வந்த சகாயம் ஐஏஎஸ், தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற கோரிக்கை இன்று இயக்கமாக உருவெடுத்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக இணைய தளங்களில், சகாயம் முதல்வராக வரவேண்டும். அதற்காக சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு வந்த ஆதரவு தாருங்கள் என்ற கோரிக்கையுடன் பதிவுகள் வெளியாகின.
அந்த பதிவுகளை ஏற்று, நேற்று காலை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வெள்ளை உடையில், சகாயத்திற்கான கோரிக்கை பதாகைகளுடன் நூற்றுக்கணக்கானோர் கூடினர்.
நேரம் செல்ல செல்ல, சில நூறுகளில் இருந்த கூட்டம் சில ஆயிரங்களாக மாறியது. சுமார் 1500 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து, ஏற்பாட்டாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டதால், பேரணி ரத்து செய்யப்பட்டு, கூட்டமாக மாற்றப்பட்டது.
கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, ‘ஊழலற்ற நல்லாட்சி அமைய வேண்டும்’, ‘சகாயம் தமிழக முதல்வராக வரவேண்டும்’ என்று கோஷமிட்டனர். எனினும் சகாயம் இதுவரை, இந்த பேரணி தொடர்பாக எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த புதிய மாற்றம் தொடர்ந்தால், அதிகவேகமாக இருக்கும் தொழில்நுட்ப வசதியால், மிக விரைவில் பெரிய அளவிலான புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது நல நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.