சரியான கதை கிடைத்தால் விக்ரமிடம் தனக்கு வில்லனாக நடிக்க கேட்பேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’.
இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. டிசம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
'ரஜினி முருகன்' படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன், "இப்படத்தில் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை செய்து முடித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞராக நடித்திருக்கிறேன்.
என்னுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. 'ரஜினி முருகன்' என்ற பெயர், அனைத்து தரப்பு மக்களை சென்றடைவதற்கு முக்கியமான காரணமாகும்.
இந்த பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது மனதில் சிறிய அச்சம் ஏற்பட்டது. ஏனென்றால் சிறு வயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன். அதே நேரத்தில் அவருடைய பெயரை அவரது அனுமதியுடன் எனது படத்திற்க்கு வைப்பது என்பது பெருமைக்குரியது.
ரஜினி சாரைப் பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்பதால் தான் எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இப்படத்தின் சிறப்பு தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் அவரை சுற்றி நடக்கும் குடும்ப அழகியலை நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்துள்ளோம்.
இந்த திரைப்படத்தில் புகைபிடிப்பது போன்ற எந்த காட்சிகளும், இடம் பெறவில்லை. இதற்கு முன் நான் நடித்த எந்த திரைப்படத்திலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தேவைப்படவில்லை அதனால் தவிர்த்திருக்கிறேன் அத்துடன் அதுபோன்ற எண்ணமும் எனக்கு கிடையாது.
என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் தான் இப்போது வரைக்கு என் நெருங்கிய நண்பர்கள் அவர்களுடன் தான் நான் இருக்கிறேன். அவர்களில் ஒரு நண்பர் அருண்ராஜா பாடலாசிரியாரகவும் மற்றும் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இன்னும் இரண்டு நண்பர்கள் தயாரிப்பு துறையில் வேலை செய்கின்றனர்.
எனக்கு வாய்ப்பளித்த அனைவரையும் நான் நன்றியுடன் நினைக்கிறேன். தொலைக்காட்சியில் நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவரை ஒருமுறை பேட்டி எடுக்கும் போது, 'ஒரு நாள் நீ கதாநாயகனாக வருவாய், அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன்' என்றார்.
அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விகரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன்” என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்