தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்பெயின் நாட்டு பிரதமரின் முகத்தில் இளைஞர் ஒருவர் குத்துவிட்டு தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதல் அடங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் பிரதமராக கடந்த 2011 முதல், கன்சர்வேடிவ் கட்சியின் மரியானோ ரஜோய் பதவி வகித்து வருகிறார்.
60 வயதாகும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, எதிர்கட்சியான சோஷியலிஸ்ட் கட்சியினர் கூறி வருகின்றனர். அங்கு, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், தன்னை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சோஷியலிஸ்ட் கட்சியின் பெட்ரோ சான்செஸ் உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தி பிரசாரத்தில் ஈடுபட ரஜோய் வந்தார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரதமரின் முகத்தில் பலமாக குத்தினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரதமரின் முகத்தில் பலமாக குத்தினார்.
படுகாயத்துடன் நிலைகுலைந்த பிரதமர் ராஜோயை பாதுகாப்புக்கு வந்த போலீசாரும், அங்கிருந்தவர்களும் தாங்கிப் பிடித்து மீட்டனர். இந்த தாக்குதலில், பிரதமர் மரியானோ ரஜோய் கண்ணாடி உடைந்தது.
உடனே தாக்குதல் நடத்திய இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்ததுடன் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறிய பிரதமர் ரஜோய் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினார்.
இந்த தாக்குதல் அடங்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.