'மழை, வெள்ளம்னு... நாம ஏதாவது செஞ்சே ஆகணும்!' - ரஜினி !

கனமழை, வெள்ளம் பாதிப்பினால் சென்னையின் இயல்பு நிலை தலைகீழாக மாறியுள்ளது. எப்போதும் தன் கருத்துகளை பொட்டில் அடித்தாற்போலச் சொல்லும் ரஜினி, சென்னை வெள்ளம் குறித்து மலேசியாவில் தன் நண்பர்களிடம் ஆதங்கத்துடன் விவாதித்திருக்கிறார். 


சமீபத்தில் மலேசியா சென்று திரும்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ‘கராத்தே’ தியாகராஜன். 

 மலேசியாவில் ரஜினியைச் சந்தித்தபோது சென்னை பாதிப்பு குறித்து ரஜினி தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார் ‘கராத்தே’ தியாகராஜன். இதுகுறித்து பேசிய கராத்தே தியாகராஜன், "ரஜினி சார் எப்பவும் மனசுல பட்டதை பட் படீர்னு பேசுவார்.

ஜெயா டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு, அங்கே முதல்வர் ஜெயலலிதாவை வைச்சுக்கிட்டே கருணாநிதியைப் பாராட்டிப் பேசுற துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்டவருக்கு தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு. 

ஆனால், அதுக்கு அரசியல்தான் ஒரே வழியானு எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அரசியலில் இல்லாவிட்டாலும் மக்கள் நலன் சம்பந்தமான விஷயங்களில் கவனம் பதித்தே இருக்கிறார். இப்போது சென்னை வெள்ளம் குறித்து கூட பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டே இருக்கிறார். 

பல வருடங்களுக்குப் பிறகும் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை, வெள்ளத்தில் தத்தளிப்பது அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ’ரொம்ப கஷ்டம்ல...! ப்ச்... அடை மழை, டிராஃபிக், வெள்ளம்னு ஒவ்வொரு நிமிஷமும் சங்கடம்ல.

நாம இந்த மக்களுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும். என்ன பண்ணலாம்னு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க. பப்ளிசிட்டியே இல்லாம செஞ்சுரணும்’ என்று என்னிடம் சொன்னார். என்னிடம் மட்டுமில்லாமல் இந்த யோசனையை தன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பலரிடமும் கேட்டிருக்கார். 

நிச்சயம் அவர் ஏதாவது பண்ணுவார்” என்றார் கராத்தே தியாகராஜன். ரஜினி ஒருமுறை சொன்னா நூறு முறை சொன்னா மாதிரி... இப்போ பலமுறை சொல்லியிருக்கிறார்.. .பார்ப்போம்!
Tags:
Privacy and cookie settings