சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது பஸ் மோதியதால் குளத்துக்குள் கார் பாய்ந்தது. இதில் காரில் இருந்த தாய், 2 மகள்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். சென்னையை அடுத்த சின்ன நீலாங்கரையை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48).
இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு வெண்ணிலா (38) என்ற மனைவியும், ரம்யா (20), பவித்ரா (17) என 2 மகள்களும் இருந்தனர். ரம்யா, தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். பவித்ரா, தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பாண்டியன் தனது மனைவி, மகள்களுடன் திருவான்மியூரில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க காரில் சென்றார். சினிமா முடிந்து நள்ளிரவில் தனது குடும்பத்துடன் காரில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது காரில் பெட்ரோல் இல்லாததால் மீண்டும் காரை திருப்பிக்கொண்டு கொட்டிவாக்கம் நோக்கி வந்தார். அப்போது பின்னால் வந்த பஸ் ஒன்று கார் மீது மோதியது.
இதனால் காரில் இருந்த தாய்–மகள்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாண்டியன், காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பஸ் டிரைவரிடம் இதுபற்றி தட்டிக்கேட்க சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த குளத்துக்குள் பாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.
உயிருடன் தனது மனைவி மற்றும் மகள்கள் குளத்து நீரில் மூழ்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாண்டியன், அவர்களை காப்பாற்றும் படி அலறினார். ஆனால் கார் மீது மோதிய பஸ்சை நிறுத்தாமல் அதன் டிரைவர் வேகமாக ஓட்டிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குளத்தில் மூழ்கிய காரை வெளியே எடுத்தனர்.
அப்போது காரில் இருந்த வெண்ணிலா, அவரது மகள்கள் ரம்யா, பவித்ரா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர். மனைவி மற்றும் மகள்களின் உடலை பார்த்து பாண்டியன் கதறி அழுதார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது மோதியது மட்டுமின்றி தனது மனைவி, மகள்களை காப்பாற்றும்படி பாண்டியன் கூச்சலிட்டும் ஈவு இரக்கம் இன்றி எந்த உதவியும் செய்யாமல் சென்ற பஸ், பச்சை நிறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அது அரசு பஸ்சா?, தனியார் ஆம்னி பஸ்சா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.