கதாநாயகிகள் என்றாலே இரண்டு டூயட், ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வைப்பதுதான் சினிமா உலகின் மாற்றப்படாத அகராதி. என்றாலும், சமீபகாலமாக வித்யாபாலன், அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் அந்த நிலையை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளனர்.
அதனால் கதாநாயகியை முன்னிறுத்தும் கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கும் அவர்கள், முன்னணி கதாநாயர்களுக்கு இணையான கதாபாத்திரங்களை சுமந்து வருகிறார்கள்.
அந்த வகையில், வித்யாபாலனுக்கு ஒரு கஹானி என்றால் அனுஷ்காவுக்கு ஒரு ருத்ரமாதேவி அமைந்தது. அதேபோல் நயன்தாராவுக்கு அனாமிகா. இவர்களெல்லாம் அடுத்தபடியாக சராசரியான கதாநாயகி வேடங்களை குறைத்துக்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், அஞ்சான், கத்தி படங்களில் சராசரி கதாநாயகியாக மட்டுமே நடித்த சமந்தா, பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஜாதி வெறி பிடித்த ஒரு பெண்ணாகவும் நடித்தார். அதைத் தொடர்ந்து தங்க மகனில் இல்லத்தரசியாக நடித்திருப்பவர்,
தெறியில் விஜய்யுடன் அவரது மனைவியாக நடித்து வருகிறார். அதுவும் மீனாவின் மகள் நைனிகா விஜய்-சமந்தாவின் மகளாக நடிக்கிறார். ஆக, ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் சமந்தா. இதற்கிடையே, அவருக்கு சரித்திர படங்களில் நடிக்கும் ஆசையும் மேலோங்கியுள்ளது.
அதனால், ஆந்திராவிலுள்ள சில அபிமான டைரக்டர்களை சந்தித்து படவேட்டை நடத்தி வரும் சமந்தா, அடுத்தபடியாக சரித்திர கதைகளுக்கு தேவையான பழங்கால சண்டை பயிற்சி மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடவும் திட்டமிட்டிருக்கிறாராம்.