சென்னை நகரில் வரலாறு காணாத மழை ஏன்?

சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்ததற்கான காரணம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரலாறு காணாத மழை

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழைப்பொழிவை பெறுகிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 44 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால் இதுவரை சுமார் 65 செ.மீ. மழை பெய்து உள்ளது.

சென்னை மாவட்டத்தில் இந்த பருவ காலத்தில் 79 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 158 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 1-ந்தேதி ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 49 செ.மீ. மழை பெய்தது.

இது கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத மழை அளவாகும். அதற்கு 2 நாட்கள் கழித்து 4-ந்தேதி 40 செ.மீ. மழை பதிவானது. இதுவும் ஒரு சாதனை என்றாலும் மக்கள் பெரும் வேதனையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. 

எல் நினோ பருவநிலை மாற்றம்

உலக அளவில் இந்த ஆண்டு (2015) அதிக வெப்பம் கொண்ட ஆண்டாக திகழ்ந்ததால், கடல் நீரின் வெப்ப அளவும் அதிகரித்தது. இதை உறுதி செய்யும் வகையில், இந்திய பெருங்கடலின் வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க கடல் மற்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் குறித்து உலக வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என்றும், வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

அதிக வெப்பமான கடல்

எல் நினோ எனப்படும் ஸ்பெயின் வார்த்தைக்கு தமிழில் ‘சின்னப்பையன்’ என்று அர்த்தம். தென் அமெரிக்காவுக்கு மேற்கே பசிபிக் கடல் நீர்மட்டத்தின் வெப்பம் பொதுவாக 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும்.

இந்த வெப்பநிலை 80 டிகிரி அல்லது அதற்கு அதிகம் ஆகும் போது அந்த பகுதியில் கடுமையான வானிலை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த எல் நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக தென்கிழக்கு ஆசியா,

வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலும் வழக்கமான வானிலை மாறி வெப்பம் அதிகரிக்கும். எல் நினோ விளைவின் காரணமாக இந்த பகுதிகளிலும் கடல் நீரின் வெப்பமும் கூடும்.
அதன்படி இந்த ஆண்டில் வடகிழக்கு பருமழை காலத்தில் இந்தியப் பெருங்கடல் அளவுக்கு அதிகமாக வெப்பம் அடைந்தது.

இதனால் தெற்கு வங்க கடல் பகுதியில் வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரித்து வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாயின. இதனால் கடல் நீர் அதிக அளவில் ஆவியாகி தீவிர மழை மேகங்களை அதிக அளவில் நிலப்பகுதியை நோக்கி தள்ளியது. எச்சரிக்கை

இதன் காரணமாகத்தான் வழக்கத்தை விட இந்த ஆண்டில் சென்னையிலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்ததாக வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

எல் நினோவின் தாக்கம் சில மாதங்கள் வரை நீடிக்கும் என்பதால் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings