சோலார் பேனல் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் கூறுவது போன்று எந்த சி.டி.க்களும் அவரிடம் இல்லை என்றும், கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனக்கு தந்தை போன்றவர் என்றும் அதே வழக்கில் கைதான தொழில் அதிபர் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் ஊழல் வழக்கு குறித்து விசாரித்து வரும் ஆணையம் முன்பு அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஆணையத்திடம் தனது வாக்குமூலத்தை அளித்தார். அவரது வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.
சோலார் பேனல் ஊழல் வழக்கில் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் சி.டி.க்கள் தன்னிடம் உள்ளதாக பிஜு தெரிவித்துள்ளார். 10 மணிநேரம் கால அவகாசம் அளித்தால் அந்த சி.டி.க்களை எடுத்து வந்து ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உம்மன் சாண்டி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான், அரசியல் தலைவர்கள் ஹிபி ஈடன், அரயதன் சவுகத், ஏ.பி. அனில் குமார், அவரின் உதவியாளர் நஸ்ருல்லா ஆகியோரும் சரிதாவிடம் இருந்து பாலியல் சுகம் பெற்றுள்ளனர் என்று பிஜு மேலும் கூறினார்.
உம்மன் சாண்டி எனக்கு தந்தை போன்றவர். மேலும் அரயதன் சவுகத்தை நான் சந்தித்ததே இல்லை. சோலார் பேனல் ஊழல் குறித்து விசாரிக்கும் ஆணையம் முன்பு ஆஜராகி அனைத்து விபரங்களையும் தெரிவிக்க உள்ளேன் என்று சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
பிஜு ராதாகிருஷ்ணன் தன்னிடம் சி.டி.க்கள் இருப்பதாக கூறுவது பொய். அவரிடம் எந்த சி.டி.யும் இல்லை. இருந்தால் அவற்றை வெளியிடட்டும் அதன் பிறகு பார்க்கலாம் என்கிறார் சரிதா நாயர்.