நேபாளத்தில் இந்திய டி.வி. சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளது. நேபாள நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய அரசியல் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த அரசியல் சட்டம், அங்குள்ள மாதேசிகள் என்றழைக்கப்படுகிற இந்திய வம்சாவளி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அரசியல் சட்டம் தங்களை இரண்டாம்தர குடிமக்களாக்கி விட்டது என்று கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிஉள்ளனர்.
அவர்கள் இந்தியாவில் இருந்து வருகிற சரக்கு லாரிகளை நேபாளத்துக்குள் அனுமதிப்பதில்லை. இதனால் நேபாளத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகி வருகிறது. சீனாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நேபாளம் பெற்று வருகிறது. ஆனால் அங்கு பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாதேசிகள் இந்தியப்பொருட்கள் வரவிடாமல் தடை செய்திருப்பதன் பின்னால் இந்தியா இருப்பதாகவும், இது இந்தியா அறிவித்துள்ள அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத்தடையாகவும் நேபாளம் கருதுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன் காட்மாண்டுவில் நேபாள மாணவர்கள் பெரிய அளவில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத்தடை விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இந்த நிலையில் இந்தியாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அங்குள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், இந்திய டி.வி.
சேனல்கள் அனைத்தையும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி முடக்கி விட்டனர். இதனால் அங்கு வாழ்கிற இந்திய வம்சாவளி மக்கள் இந்திய டி.வி. சேனல்களை பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வளர்ந்து வருவது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. இதை உள்நோக்கம் கொண்டதாக குறிப்பாக அரசியல் அல்லது பிற வகையிலான உள்நோக்கம் கொண்டதாகத்தான் நாங்கள் கருத வேண்டி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான மனப்போக்கு வளர்ந்து வருவது நல்லதல்ல. இந்த மனப்போக்கை ஊக்குவிப்பது, இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் சம அளவில் கேடு விளைவிக்கும்.
ஒரு பிரிவினர், இந்திய எதிர்ப்பு உணர்வினை ஊக்குவித்து வருகின்றனர். இது அவர்களுக்கு சில வழிகளில் உதவுகிறது. என்று நேபாளத்துக்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே கூறிஉள்ளார்.