ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியத் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது.
ஆப்கன் தலைநகர் காபூலின் வடகிழக்கே 280 கி.மீ தொலைவியில் பூமிக்கு கீழை 126 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டரின் 6.2 ஆக பதிவானது.
வீடுகள் பயங்கரமாக குலுங்கியதால் பாதுகாப்பு கருதி தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடியவிடிய சாலைகளிலேயே தங்கினர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் 6.9 ரிக்டர்:
பாகிஸ்தானிலும் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப், லாகூர், கைபர் பக்துன்வா போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டிருந்தது.
ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியிருந்தாலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
கடந்த அக்டோபர் 26-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தானில் மட்டும் 200 பேர் பலியாகினர்.
டெல்லியில் நில அதிர்வு:
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் உணரப்பட்டது. சனி அதிகாலை 12.44 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பொருட் சேதமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. நில அதிர்வு காரணமாக தொலைபேசி சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.