யோகா டீச்சராக இருந்து நடிகை ஆனவர் அனுஷ்கா. இதனால் தனது உடல் தோற்றத்தை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகளை எளிமையாக கையாள முடிந்தது.
நடிப்பை பொறுத்தவரை ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப பயிற்சி எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வந்தார். பாகுபலி, ருத்ரம்மாதேவி படங்களுக்கு வாள் பயிற்சி, குதிரை ஏற்ற பயிற்சி பெற்று நடித்தார்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்கு 100 கிலோ எடை அதிகரித்து குண்டு பெண்ணாக நடிக்க கேட்டபோது சம்மதித்தார். இதனால் அதிக உணவு உட்கொண்டு தோற்றத்தை குண்டாக்கினார். படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இந்நிலையில் பாகுபலி 2ம் பாகத்திற்கு நடிக்க தயாராகும்படி இயக்குனர் ராஜமவுலி கூறினார். இதனால் குண்டான தோற்றத்தை குறைக்க பயிற்சியில் ஈடுபட்டார். அது எளிதாக அமையவில்லை. எதிர்பார்த்த ஸ்லிம் தோற்றம் கிடைக்காததால் அப்செட்டில் இருந்தார்.
இதையடுத்து கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி அவருக்கு தோழிகள் சிலர் அட்வவைஸ் வழங்கினர். அவரும் அதற்கு சம்மதித்திருந்தார். அமெரிக்கா அல்லது வேறு நாட்டுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசித்தார்.
இந்த தகவல் பரவியது. யோகா டீச்சரான தான் செயற்கை முறையில் உடல் எடை குறைப்பதை சிலர் விமர்சித்தனர். இதையடுத்து ஆபரேஷன் திட்டத்தை கைவிட்டார். இதுபற்றி அனுஷ்கா கூறும்போது,‘நான் ஆபரேஷன் செய்ய எங்கும் செல்லவில்லை. அதெல்லாம் வதந்திதான்.
நான் கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் யோகா மற்றும் ஜிம் சென்று எனது உடல் எடையை குறைக்கிறேன். நான் இயற்கை வழியை தான் பின்பற்றுவேன். அறுவை சிகிச்சை என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றார்.