சகிப்பின்மை குறித்து என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை: யுவன் !

ஆண்டுக்கு 10க்கும் அதிகமான படங்கள், வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் தொடர்ச்சியான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் என மிகவும் பிசியாக இருந்த யுவன் சங்கர் ராஜா, இந்த ஆண்டில் மிக குறைந்த படத்துக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். 
 
மதமாற்றம், திருமணம் என தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமே செய்திகளில் இடம் பிடித்து வந்த யுவன் சங்கர் ராஜா, சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் இசை சார்ந்த செய்திகளில் அடிபடத்துவங்கியுள்ளார். 

துபாய், மலேசியா, சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள யுவன் சங்கர் ராஜா, வரும் ஜனவரி 23-ம் தேதி கோவையிலும், 26-ம் தேதி மதுரையிலும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். 

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த யுவன் சங்கர் ராஜா, "இந்த இசை நிகழ்ச்சியில தன் இசையமைப்பில் பாடிய பாடகர்கள், தன்னுடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்," என்றார். 

அதைத் தொடர்ந்து, 'இவ்ளோ நாள் எங்கே போயிட்டீங்க?', 'இளையராஜா இந்த இசை நிகழ்ச்சிக்கு வருவாரா?', 'சகிப்புத்தன்மை குறித்து ஏ.ஆர்.ரகுமான் சொன்னது' உள்ளிட்டவை குறித்து கேள்விகளை முன்வைத்தோம். அந்த கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் இங்கே. 

இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு இசைஞானி இளையராஜா வருகிறாரா? 

அவர் தேதியை பொறுத்து வருவார். கண்டிப்பாக இந்த இசை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.

செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றும் போது, உங்கள் இசை மேஜிக்கல்லாக இருக்கும். மீண்டும் எப்போது செல்வராகவனுடன் இணைவீர்கள்? 

ஏற்கனவே 'கான்' என்ற ஒரு படம் ஸ்டார்ட் செய்தோம். ஆனால், அது எதிர்பாராதவிதமாக ட்ராப் ஆகிவிட்டது. செல்வா உடன் ஒரு ப்ராஜெக்ட் அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளோம். செல்வாவும், நானும் பேசி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். 

மேற்கத்திய இசையை தவிர்த்து வேறு வகையில் இசையமைக்க முயற்சிக்கலாமே? 

எல்லாவித இசை கொண்ட படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், அது என் கையில் இல்லை. இயக்குனர்கள் கையில் தான் உள்ளது. தற்போது பாரதிராஜா இயக்கி, நடித்து வரும் படத்தில் கர்நாடிக் ஜதி வைத்து ஒரு பாடல் வேண்டும் என கேட்டார். அந்த பாடலுக்கு நான் இசையமைத்துள்ளேன். எனவே, எந்த வகை இசையமைப்பது என்பது என் கையில் இல்லை. இயக்குனர்கள் கையில் தான் இருக்கிறது. 

அடுத்த படம்? 

என் இசையமைப்பில் வரும் அடுத்த படம் தரமணி. தற்போதைய இளைஞர்களின் காதல் கதை.

ரொம்ப நாளா பீல்டுல ஆளை காணோமே? இளைஞர்களுக்கு வழி விடறீங்களா? 

அப்படி எல்லாம் இல்லை. நான் இங்க தான் இருக்கேன். இங்க தான் இருப்பேன். இந்த வருஷம் குறைவா படங்கள் ஒத்துக்கொள்ளலாம்னு முடிவு பண்னி தான் கொஞ்ச படங்களை மட்டும் ஒத்துகிட்டேன். அப்பாவுக்கு (இளையராஜா) அப்புறம் ஒரு வருஷத்துல அதிகம் படங்கள் இசையமைச்சது நான் தான். 

ஒரு வருஷத்துல 14 படங்கள் வரை இசையமைச்சிருக்கேன். இப்படி வேலை பார்த்ததுல கொஞ்சம் மென்டலி டயர்ட் ஆகிட்டேன். 24 மணி நேர வேலை, தூக்கமில்லா இரவுகள்னு கொஞ்சம் மனதளவில் டயர்ட் ஆகீட்டதால, கொஞ்சம் ப்ரேக் விட்டிருக்கேன். அடுத்த வருஷம் மீண்டும் நிறைய படங்களுக்கு இசையமைப்பேன்.

சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக எழுந்துள்ள கருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆதரவு தெரிவித்துள்ளாரே? 

நான் டிவி பார்த்து ரொம்ப நாளாச்சு. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மன்னிக்கவும். 

விருதுகளை திருப்பி கொடுப்பது பற்றி? 

இதை பற்றி நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. இது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். இதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இப்போது வரும் பாடல்களில் இசை அதிகமாக இருக்கு. இதனால் பாடல் வரிகள் புரிவதில்லை. இதற்கு என்ன காரணம்? 

 தலைமுறை மாற்றம் தான் காரணம். என் அண்ணன் பையன் எனக்கு புரியாத பாடல்களை பாடுகிறான். அது அடுத்த தலைமுறை. இருந்தாலும் என் இசையில் வரிகளை தெளிவாக கேட்க வேண்டும் என்று தான் இசையமைக்கிறேன்.
Tags:
Privacy and cookie settings