சென்னை அழியப்போவதாக வாட்ஸ்சப்பில் பரவும் வதந்தி !

மழை நின்றாலும் தூவானம் நிற்காத கதையாக, சென்னையே அழியப்போகிறது என்கிற வகையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. தற்போது சென்னைக்கு ஆபத்து ஏதும் இல்லை என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம். 
 

இந்த தகவலை முடிந்த அளவுக்கு வெள்ள பாதிப்புள்ள மக்களிடம் பரப்பி அவர்களின் பீதியை குறையுங்கள். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை நின்றுவிட்ட நிலையில், வாட்ஸ்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக ஒரு தகவல் மும்முரமாக பரப்பப்படுகிறது.

எச்சரிக்கை... என்று ஆரம்பிக்கும் அந்த மெசேஜில், "நண்பர்களே! நீங்கள் சென்னையில் இருந்தாலோ, உங்கள் நண்பரோ, உறவினரோ இருந்தாலும் உடனே வெளியேற சொல்லுங்க, ஏன்னா அடுத்த 72 மணிநேரத்திற்க்கு இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல். 

சென்னைல பெய்யரது வெறும் மழை அல்ல, NASA ரிப்போர்ட்படி இதுதோட பெயர் EL Nino சூழற்சி புயல். கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு, சென்னையே முழுகி போக வாய்ப்பு உண்டு" எனக்கூறி ஒரு மெசேஜ் சுற்றுகிறது.

புழல் ஏரி உடைந்துவிட்டதாக இன்று காலை வடசென்னையில் ஒரு வதந்தி பரப்பிவிடப்பட்டதால், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று நேற்று விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை இன்று தேசிய வானிலை மையம் திரும்ப பெற்றுவிட்டது. 

காரணம், வங்கக்கடலில் உருவாகியிருந்த, காற்றழுத்த தாழ்வு நிலையானது வலு குறைந்துவிட்டது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட, ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு கூட குறைக்கப்பட்டுவிட்டது. 

நிலைமை இப்படி இருக்கும்போது, சென்னை அழிந்துவிடப்போகிறது, ஊரைவிட்டு ஓடு.. என்கிற ரீதியில் வரும் வதந்திகளால், மக்கள் பீதியடைந்து, மொத்தமாக சொந்த ஊர்களை நோக்கி ஓடும் நிலை ஏற்படலாம்.

அப்போது வாகனங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து, பெரும் தொந்தரவுகள் ஏற்படலாம். எனவே, வதந்தியை பரப்புவோர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுநல நோக்கர்கள் கருத்தாக உள்ளது.
Tags:
Privacy and cookie settings