மிதக்கிறது சென்னை சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தம்!

கனமழை காரணமாக சென்னையில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை தனித்தீவாக காட்சியளிக்கிறது.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை நின்றதன் காரணமாக, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் மீண்டும் தமிழகத்தன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இதனால், அதிகமான உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பஸ் போக்குவரத்து

கனமழை காரணமாக, சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாலைகள் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், மாற்றுப்பாதையில் தென் மாவட்டங்களுக்கு 400 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளியூர்களுக்கு செல்வதற்காக கோயம்பேடு சென்ற பயணிகள் பேருந்து இல்லாததால் தவித்து வருகின்றனர்.


மேலும், சென்னை முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து சாலைகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரயில் போக்குவரத்து

இதேபோல், சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்களின் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், சென்னையிலிருந்து புறப்பட்ட ரயில்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்த ரயில்களிலும் வழியிலேயே ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல், சென்னையிலிருந்து பல்வேறு புறநகர்பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான போக்குவரத்து

இரு தினங்களுக்கு பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையிலுள்ள விமான நிலையம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், சென்னையிலிருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.


இதேபோல், வெளியிடங்களில் இருந்து சென்னை வரும் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், விமான பயணிகளும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னையிலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் பஸ், ரயில், விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதால் தற்போது சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டு, தனித்தீவாக காட்சியளிக்கிறது.

வீடியோ

இதேபோல், சென்னையில் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன்!
Tags:
Privacy and cookie settings