நடிகர் சிம்பு பாடி இருக்கும் என்னா..க்கு லவ் பண்றோம்… என்னா… க்கு லவ் பண்றோம் என்கிற ஆபாச பாடல் இணைய தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பாடலில் என்னா… என்கிற வார்த்தைக்கு பின்னார் சேர்க்கப் பட்டிருக்கும் வார்த்தையே பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறுவறுக்கத் தக்க வகையிலான அந்த வார்த்தை வெளியில் கேட்காத வகையில் பீப்…. பீப்…. என்கிற இசை சேர்க்கப் பட்டுள்ளது.
இருப்பினும் இதை எல்லாம் தாண்டி, அது என்ன வார்த்தை என்பதை உணர முடிகிறது. யூடியூப் மூலமாக வெளியாகி இருக்கும் இந்த பாடல், தற்போது செல்போனில் ‘வாட்ஸ்–அப்’ வழியாகவும் வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக சிம்புவுக்கு எதிராகவும், அந்த பாடலுக்கு இசை அமைத்திருப்பதாக கூறப்படும் கொலவெறி பாடல் புகழ் அனிருத்துக்கு எதிராகவும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் உள்ள சிம்புவின் வீட்டு முன்பும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையை தொடர்ந்து சென்னை, சேலம், திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 3 புகார்கள் அளிக்கப் பட்டிருந்தது. நேற்றும் 2 அமைப்புகளை சேர்ந்தவர்கள். புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்பு, அனிருத் ஆகியோருக்கு சம்மனும் அனுப்பப் பட்டுள்ளது.
வருகிற 19–ந்தேதி அன்று 2 பேரும் கோவை போலீசில் விசாரணை க்காக ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சென்னையில் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலக த்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையை போல சென்னை போலீசார் சிம்பு விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வில்லை. ஆபாச பாடலுக்கு எதிரான ஆதாரங்களை அவர்கள் திரட்டி வரு கிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
பிரச்சினைக்குரிய ஆபாச பாடல் வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நடிகர் சிம்பு அதனை நான் வெளியிட வில்லை என்று கூறி இருக்கிறார். யூடியூப் மூலமாகவே அந்த பாடல் வெளியில் வந்துள்ளது.
அப்படியென்றால் சிம்பு பாடி இருப்பதாக கூறப்படும் பாடலை வெளியிட்டவர் யார்? என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளோம்.
அந்த நபர் பிடிபட்டால் அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணைக்கு செல்வோம்.
சர்ச்சைக்குரிய பாடலை சிம்புதான் பாடினாரா? என்பதையும் உறுதிபடுத்த வேண்டும்.
இதற்காக ‘வாய்ஸ் டெஸ்ட்’ என்று அழைக்கப்படும் குரல் பரிசோதனையும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த சோதனையை தடயவியல் நிபுணர்களே நடத்துவார்கள்.
சிம்புவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியவுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
இதன் பின்னரே, குரல் பரிசோதனை நடைபெறும். சிம்புவை வரவழைத்து சம்பந்தப்பட்ட பாடல் வரிகளை பாடச்சொல்லி அதனை பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள்.
பின்னர் இணையதளத்தில் வெளியான பாடலுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து இரண்டுக்கும் ஒரே குரல் தானா? என்பதை ஆய்வு செய்வார்கள். இந்த சோதனையை தடயவியல் நிபுணர்கள் மேற்கொள்வார்கள்.
இப்படி திரட்டப்படும் ஆதாரங்களின் உண்மை தன்மையை வைத்தே சிம்புவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சிம்பு சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளி நாட்டுக்கு தப்பிச் சென்று விடாமல் இருக்க சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்குவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் நடவடிக்கை, பெண்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக சிம்பு மீதான பிடி இறுகி வருகிறது.