ஆந்திராவில் கால் மணி என்ற பெயரில் நடந்து வரும் கந்துவட்டி கொடுமையில் அம்மாநில எம்.எல்.ஏ., எம்.எல்.சி. உள்ளிட்ட அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.
கால் மணி என்ற பெயரில் அப்பாவிகளுக்கு சிறு கடன்களை கொடுத்து அதிகவட்டி வசூலிக்கும் தொழிலை அரசியல் புள்ளிகளின் ஆதரவுடன் சிலர் அமோகமாக நடத்தி வந்துள்ளனர்.
கடன் பெறுபவர்களிடம் இருந்து 150 முதல் 200 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் இவர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்களை கொடுமைப்படுத்தி அடவாடி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயவாடாவை சேர்ந்த சர்மா என்பவர் கூறும்போது வெங்கடேஷ்வர ராவ் என்பவரிடம் 50 ஆயிரம் கடன் வாங்கியதற்காக தினமும் 500 ரூபாய் விதம் 5 ஆண்டுகளாக திருப்பி செலுத்தி வந்ததாக தெரிவித்தார். ஆனால் இதுவரை கடன் பெற்றதற்காக கொடுத்த ஆவணங்களை திரும்ப பெற முடியவில்லை என்று கண்ணீருடன் அவர் கூறினார்.
கடனை திருப்பி செல்லுத்த முடியாத பெண்களை இந்த கும்பல் பாலியல் தொழிலில் தள்ளும் கொடுமையும் அரங்கேறியுள்ளது. இதனிடையே விஜயவாடாவில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுக்கு 6 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும் பணம் கொடுத்தவர் தொடர்ந்து மிரட்டி வருவதாக அவர் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் ஸ்ரீகாந்த் என்பவரை கைது செய்தனர். ஆனால் இவர் ஆளும் கட்சியான தெலுங்கு தேச எம்எல்ஏ போடே பிரசாத்தின் நெருங்கிய நண்பர் என அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் வெனிகல்லா ஸ்ரீகாந்த் தமக்கு நண்பர் மட்டுமே என்றும் அவரது தொழில் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் போடே பிரசாந்த மறுத்துள்ளார். இதேபோன்று சிர்புல வெங்கடேஷ்வர ராவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.சி. புத்தா நாகேஸ்வர ராவுக்கும் கால்மணி எனப்படும் கந்து வட்டி கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் குற்றச்சாட்டை புத்தா வெங்கன்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார். கால்மணி விவகாரம் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆளுரை சந்தித்து மனு அளித்துள்ளார். மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் கால்மணி விவகாரம் ஆந்திர அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சி பிரமுகர்கள் உட்பட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.