பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான 'அமேசான்' எதிர்காலத்தில் ஆளில்லா குட்டிரக விமானங்கள் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிட்டிருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
'அமேசான் பிரைம் ஏர்' எனப்படும் இந்த சிறப்பு சேவையில் 30 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் ஆர்டரை டெலிவரி செய்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் தோன்றுகிறது.
அழகான குட்டிரக விமானம் ஒன்று ஆர்டர் செய்த பொருளுடன் பறக்க துவங்கி, சென்று சேர்க்க வேண்டிய இடத்தை துல்லியமாக தூரம் மற்றும் நேரத்துடன் கண்டறிந்து பல்வேறு வானிலைகளில் பறந்து அந்த பொருளை கொண்டு சேர்ப்பது போன்ற காட்சிகள் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.
இந்த குட்டிரக விமானம் 15 மைல் தூரம் வரை செல்லும் திறன் வாய்ந்தது எனவும், 400 அடி வரை உயரத்தில் பறக்கக்கூடியது என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதுபோன்ற பேக்கேஜ்களை டெலிவரி செய்ய குட்டிரக விமான தொழில்நுட்பத்தை கூகுள் மற்றும் வால் மார்ட் ஆகிய நிறுவனங்கள் ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.