யூடியூப் இணையதளம் பார்க்க 13 வயதுக்குட்பட்டோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்தியாவில் தினமும் 76 விழுக்காடு சிறுவர்கள் யூடியூப் இணையதளத்தை பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான அசோசெம் நடத்திய ஆய்வில், பெருநகரங்களில் உள்ள குடும்பங்களில் 6 முதல் 13 வயது வரையிலான சிறுவர்கள்
பெற்றோர் உதவியுடன் யூடியூப் வீடியோக்களை பார்ப்பதாக தெரியவந்துள்ளது. பெரும்பாலும், அவர்கள் இசை/பாடல் தொடர்பான வீடியோக்கள் அதிகம் பார்த்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.
இது தொடர்பாக, சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, புனே, சண்டிகர், லக்னோ, தேராதூன் ஆகிய நகரங்களில் உள்ள சுமார் 4750 பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், யூடியூப் பார்க்கும் சிறுவர்களில் 76 விழுக்காட்டினர் 13 வயது உடையவர்கள் என்றும், 69 விழுக்காட்டினர் 11 வயதுடையோர் என்றும், 10 வயதுடையோர் 65 விழுக்காடு என்றும் தெரியவந்துள்ளது. 9 வயதுடைய சிறுவர்களில் 40-50 விழுக்காடு யூடியூப் பார்ப்பதாக அசோசெம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவர்கள் மற்ற இணையதளங்களிலும் ஆக்டிவாக இருப்பதாக அந்த ஆய்வு கூடுதல் அதிர்ச்சியை தந்துள்ளது. பெருநகரங்களில் பெற்றோர் / மற்றவர்களின் உதவியோடு சிறுவர்கள் இது போன்ற இணையதளங்களை எளிதாக அணுக வாய்ப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.