மதுரையில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு அவரது தோழியே தன் காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமானது. மதுரை தல்லாகுளம் பகுதியை சார்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி பவித்ரா(23).
ஜெயக்குமார் துபாயில் இன்ஜினியராக வேலை செய்துவருவதால் தனது மாமியாருடன் பவித்ரா தல்லாகுளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று தனது வீட்டுக்குள் பவித்ரா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். புலன்விசாரணைக்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பவித்ராவின் போனில் கடைசியாக வந்த அழைப்புகளை ஆய்வு செய்தது காவல்துறை. அதில் பவித்ரா கொல்லப்படுவதற்கு முன் சியாமளா என்பவரிடம் பேசியது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து, அவரிடம் போலீஸார் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர்.
இறுதியில் தனது கள்ளக்காதலன் ரமேஷ் உடன் சேர்ந்து பவித்ராவை கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டார் . விசாரணையில் காதலன் ரமேஷுக்கு பணம் தேவைப்பட்டதால், வசதியான தோழியான பவித்ராவைக் கொன்றால், பணம் நகை நிறைய கிடைக்கும் என திட்டமிட்டு கொலை செய்ததாக சியாமளா தெரிவித்தார்.
“சம்பவத்தன்று அவரது மாமியார் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் பவித்ரா தனியாக இருப்பதை அறிந்து கொண்டு மிளகாய் பொடி, கயிறு, கத்தியுடன் தயார் நிலையில் சென்றோம். பவித்ராவிற்கு போன் செய்துவிட்டுதான் சென்றோம். அவள் எனக்கும் ரமேஷுக்கும் காபி போட்டுக் கொடுத்தாள்.
அப்போது அவள் எதிர்பாராத நேரத்தில் கைகளை கட்டி ரமேஷ் குத்திக் கொலை செய்தான். உடனடியாக பணம் நகையுடன் அங்கிருந்து ஆட்டோவில் தப்பித்து சென்றுவிட்டோம்“ என தனது வாக்குமூலத்தில் சியாமளா கூறியதையடுத்து அவரையும் காதலன் ரமேஷையும் போலீஸார் கைது செய்தனர்.
இன்று பிற்பகலில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்-2 ல் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பணம் நகைக்காக பழகிய தோழியையே பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.