சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டை இழந்த முதியவர் ஒருவர் கண் முன்னே மனைவியையும் வெள்ளம் அடித்துச் சென்றதைக் கண்டு கதறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி யுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள பழைய பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் ஜெபமாலை.
இவருடைய மனைவி மேரிபுஷ்பம். இவர்கள் மகளுடன் பாரதி நகரில் வசித்து வந்தனர். கடந்த 1 ஆம் தேதி இவர்களின் மகள் வெளியில் சென்று இருந்தார்.
அப்போது பெய்த கன மழையின் போது ஜெபமாலையும், மேரிபுஷ்பமும் வீட்டில் இருந்தனர். இவர்கள் வீட்டை மழைவெள்ளம் சூழ்ந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் கணவன், மனைவி இருவரும் கட்டிலின் மேல் அமர்ந்து இருந்தனர்.
நேரம் ஆக ஆக தண்ணீர் அதிக அளவில் வீட்டுக்குள் புகுந்ததால் அந்த கட்டிலின் மேல் மற்றொரு கட்டிலை போட்டு மனைவியுடன் ஜெபமாலை மேலே ஏறி நின்றார்.
மழை வெள்ளத்தின் அளவு அதிகரித்து வீட்டை மூழ்கடிக்கும் நிலை வந்தது. இதனால் ஒரு கையில் மின்விசிறியையும், மறு கையில் மனைவியையும் ஜெபமாலை பிடித்து கொண்டார்.
வெகுநேரமாக கழுத்து அளவுக்கு தண்ணீர் இருந்ததால் மேரிபுஷ்பம் சோர்ந்து போய் வெள்ளநீரில் விழுந்து தத்தளித்தார். கண் எதிரில் மனைவி தண்ணீரில் தத்தளித்ததை பார்த்து ஜெபமாலை கதறினார்.
ஆனால் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லாததால் மேரிபுஷ்பம் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதபடி மின்விசிறியை பிடித்து கொண்டு 2 நாட்களாக ஜெபமாலை தண்ணீரில் சிக்கி தவித்தார்.
அதன் பின்னர் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் ஜெபமாலையை படகில் அழைத்துச் சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
வெள்ளத்தில் சிக்கிய மேரிபுஷ்பத்தின் உடலை 3 ஆம் தேதி கவுன்சிலர் புகழேந்தி, த.மு.மு.கவினர் மீட்டு வெளியில் எடுத்து வந்தனர்.
உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கல்லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது.