இசையமைப் பாளர் இளைய ராஜாவின் மகனும், பிரபல இசை அமைப்பாள ருமான யுவன் சங்கர் ராஜாவின் ஒளி, ஒலி காட்சிகள் மதுரை, ஜே.சி ரெசிடென்சி ஹோட்டலில் திரையிடப் பட்டது. மேலும், அவர் வெளி நாடுகளில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளும் திரையிடப் பட்டன.
இதன்பின்னர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ''மதுரையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. வரும் ஜனவரி 26-ம் தேதி மாலை 6 மணிக்கு, தமுக்கம் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அதில் என்னுடன், என் குழுவினரும் மற்றும் சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதில், 18 முதல் 30 பாடல்கள் வரை பாடப்படும். 3 மணி நேர நிகழ்ச்சியாக, பிரம்மாண்ட வண்ண விளக்குகளால் சித்தரிக்கப்பட்டு, மாபெரும் இசை நிகழ்ச்சியாக நடைபெறும். சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொள்ளும் அளவிற்கு இடம் அமைக்கப்படும்.
ஒரு டிக்கெட்டுக்கு ரூ250 முதல் 25,000 வரை வசூலிக்கப்படும். அதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழை மக்களுக்கும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவு அற்றவர்களும் செலவு செய்யப்படும்'' என்றார்.
இதன் பின்னர், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, யுவன் சங்கர் ராஜா பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:
மதுரை பற்றி உங்கள் கருத்து?
பாரம்பரிம் மிக்க மதுரையில் எனக்கு உணவுகள் மிகவும் பிடிக்கும். எனது தாயாருடன் மதுரைக்கு பயணம் செய்த காலங்கள் இன்னும் என் மனதில் நீங்காது இடம்பெற்றுள்ளது.
மேலும் என் தந்தைக்கு மதுரை மிகவும் பிடிக்கும். அவர் இங்கு பல முறை இசை விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் அளவிற்கு இந்த இசை விழாவை சிறப்பாக நடத்த ஆசைப்படுகிறேன். மேலும், மதுரையின் சிறப்பை பற்றி, பாடல் விழா நடக்கும் போது பாடலாம் என்று ஒரு ஐடியா வந்துள்ளது.
மேலும், அப்பா பாடும்போது எல்லோரும் அமைதியாக இருப்பார்கள். ஆனால், நான் பாடும்போது அனைவரும் இசை வெள்ளத்தில் துள்ளி குதிப்பார்கள்.
நீங்க ஹீரோ ஆக ஆசைப்படுகிறீர்களா?
இல்லவே இல்லை. நடிப்பிற்கும், எனக்கும் ரொம்ப தூரம். ஆல்பம் செய்யும்போது கூட திரையில் வருவதற்கு அச்சப்படுவேன். திரையில் எப்போதாவது வரலாம். ஆனால் ஹீரோவாக கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.
ஹாலிவுட் படம் சென்று வொர்க் செய்வீர்களா?
கண்டிப்பாக. அதன் வேலை தற்போது கூட தொடக்கத்தில்தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு அதன் வேலை முழு மூச்சாக நடைபெறும். எனது நண்பரின் உறவினர்தான் அந்த ஹாலிவுட் படத்தை இயக்கவிருக்கிறார்.
எனவே, தெரிந்த முகங்களை அதிகமாக சந்திக்க நேரிடும் என்பதால், அப்படமும் எனக்கு கொஞ்சம் எளிமையாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். கண்டிப்பாக அதற்கு மெனக்கிடுவேன்
உங்க அப்பா இளைராஜா பற்றி?
எனது அப்பாவை எப்போதும் என்னுடன் ஒப்பிடமாட்டேன். எனக்கு நான் மட்டும்தான் போட்டி. எனக்கு அப்பாவின் பாடலில் 'நான் தேடும் செவ்வந்தி பூ இது' என்ற பாடல் மிகவும் பிடிக்கும். நான் இசைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.
எனது பாடல்களையும் அவர் ரசிப்பார். நேரம் கிடைக்கும்போது இசையை பற்றி பகிர்ந்துகொள்வோம். 7ஜி, துள்ளுவதோ இளமை, தங்க மீன்கள் போன்று சுகமானா பாடல்களுக்கு அப்பா அதிக பாராட்டு தெரிவித்தார்.... -சே.சின்னத்துரை