கட் அவுட்டில் அம்மாவின் தியாகம்!

தமிழக தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், பல சடலங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவர் நெல்லையில் வைத்துள்ள கட்-அவுட் மக்களின் கடும் கோபத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. 


நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன் என்பவர் வைத்துள்ளதாக கூறி ஒரு கட்-அவுட் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த கட்-அவுட்டில், நீரில் மூழ்கியபடி ஜெயலலிதா ஒரு குழந்தையை தனது கையில் பிடித்து நீரில் மூழ்காமல் காப்பது போன்ற காட்சி இடம் பிடித்துள்ளது. அந்த குழந்தைதான் தமிழகம் என்ற அர்த்தத்தில், அந்த கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் வெளியாகி பெரும் மக்களால் பாராட்டப்பட்ட, பாகுபலி திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணன் கதாப்பாத்திரம், ஆற்றில் மூழ்கிக்கொண்டே, குழந்தையை மட்டும் காப்பாற்றும். அந்த சீனை ஆல்டர் செய்து இந்த கட்-அவுட் பொருத்தியுள்ளார். 

பக்கத்திலுள்ள ஒரு டச்சிங் வாசகம் இப்படி சொல்கிறது, "தண்ணீரில் தத்தளித்த தமிழகத்தை தனித்து நின்று காப்பாற்றிய தரணி போற்றும் தாயே! எங்கள் அம்மா" என்று கூவுகிறது அந்த வாசகம். நெல்லையில் மழையின் தாக்கம் அதிகம் இல்லை என்பதால் மக்கள் இதை நம்பிவிடுவார்கள் என்று நினைத்து கட்-அவுட் வைத்துவிட்டார் போலும்.

ஆனால், தலைநகர் சென்னையில் மக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளவில்லை. அரசு என்று ஒன்றே செயல்படவில்லை என்று கமல் முதல் கலாம் உதவியாளர் வரை கழுவி, கழுவி ஊத்திவிட்டனர். எத்தனையோ பேர் உதவி எண்களுக்கு போன் செய்தும், காப்பாற்ற ஆளில்லாமல் தவிப்பதாக குமுறிக்கொண்டுள்ளனர். 

ஆனால் மழைக்கு நடுவே இப்படி ஒரு கட்-அவுட்டை வைத்து, ஆதாயம் தேடிய இந்த நபர், தமிழக அரசியல் எந்த அளவில் உள்ளது என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது.
Tags:
Privacy and cookie settings