ஆண்களுக்கு இணையாக நிவராண பணியில் இஸ்லாமிய பெண்கள்!

அவசியமான நேரத்தில் முன்வந்து உதவும் அனைவருமே ஹீரோக்கள் தான். ஆனால் இந்தக்குடும்பத்தினரின் செயல் ஹீரோக்களையே வியந்து பார்க்க வைக்கும் சூப்பர் ஹீரோயிஸம். 


ஏற்கனவே திரு அப்துல் வஹாப், அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் அமிஞ்சிகரை ஸ்கைவாக் எதிரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த காலணி மக்களுக்கு உணவளிக்க நம்மை தூண்டியதையும்.
அவர்கள் செலவில் இரவு உணவளித்ததையும் எழுதியிருந்தேன். ஆனால் அதன் பின் நான்கு நாட்களாய் தொடரந்து கிட்டத்தட்ட 9 வேளை உணவளித்து வருகின்றனர். ஒரு வேளைக்கு உணவளிப்பதே மிகப்பெரிய விசயம். 

ஆனால் அதை காலை, மதியம், இரவு என தொடந்து நான்கு நாட்களாய் புன்னகை மாறாமல், மனம் சலிக்காமல் செய்ய நிச்சயமாய் பரிசுத்தமான அன்புள்ளம் வேண்டும். நீங்கள் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னாலே போதும்.. நாம் கொடுத்துவிட தயாராய் இருக்கிறோம். 
 

ஆனால் அவர்கள் தன் குடும்பத்தின் பெண்கள், குழந்தைகளை அனைவரையும் அழைத்துவருகின்றனர். அனைவரும் இறங்கி ரோட்டாரத்தில் பந்தி வைத்து பரிமாறுகின்றனர். மழையோ வெயிலோ தங்களின் கடமையாய் பொறுப்புடன் செய்கின்றனர்.

அதுவும் இந்த குடும்பத்தின் பெண்கள் என்னை இன்னும் ஆச்சர்யப்படுத்தினர். நிறைய துணிமணிகளை எடுத்துவந்து கொடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் சகோதரியைப் போல பேசி அவர்களின் அவசியத்தேவைகளை கேட்டு அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்கின்றனர். 

எல்லா குடும்பத்து பெண்களையும் ஒரு பேப்பரில் தங்களின் தேவைகளை பட்டியலிட்டு எழுதித்தர சொல்லி வாங்கிச்சென்றனர். தானே முன்னின்று உணவளிக்கின்றனர். கூட்டத்தை அதட்டி கட்டுப்படுத்துகின்றனர். 
 

தங்களின் பையன்களையும், பருவ வயது பெண்குழந்தைகளையும் அழைத்து வந்து இதில் பங்கெடுக்க ஊக்கப்படுத்துகின்றனர். இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது ஒருவித பிற்போக்குத்தனமாய் விமர்சிக்கபடும் விசயம். ஆனால் முற்போக்குத்தனம் என்பது அணியும் உடையில் இல்லை.

அது மனதில், நாம் செய்யும் செயல்களில் இருக்கிறது என்பதற்கு இவர்களே சிறந்து உதாரணம். மனித நேயத்தை, அதை அவசியமானவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான செயல்கள் மூலமாய் வெளிக்காட்டுவதைவிட சிறந்த முற்போக்கான விசயம் எதுவும் இல்லை!
Tags:
Privacy and cookie settings