பயங்கரவாதத்துக்கு எதிராக போராட 34 முஸ்லிம் நாடுகளின் புதிய இராணுவ கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
றியாத்தில் உள்ள கூட்டு இராணுவ மையத்தினால், இந்த கூட்டணி இராணுவம் ஒருங்கிணைக்கப்படும் என்று சவுதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அரபு உலகம், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த நாடுகள் இதில் அங்கம் வகிக்கும்.
இராக், சிரியா, லிபியா, எகிப்து மற்றும் ஆப்கானில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு எதிராக தமது நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், சவுதியின் பாதுகாப்பு அமைச்சர், முடிக்குரிய இளவரசர் வரிசையைச் சேர்ந்த முஹமட் பின் சல்மான் கூறியுள்ளார்.
ஆனால், இது நடைமுறையில் எவ்வாறு செயற்படும் என்பது குறித்த போதுமான விபரங்கள் கிடைக்கவில்லை.