வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு இலவச பேருந்து !

சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு இலவச பேருந்து இயக்குவது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்தே இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 


உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை கூடியதும் சென்னை வெள்ளத்தில் சிக்கி உடமைகளை இழந்து தவிப்போர் வெளிமாவட்டத்துக்கு செல்ல வசதியாக கோயம்பேட்டில் இருந்து இலவசமாக பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

நீதிமன்றம் தானாக வந்து இதை வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் பிரபாகரனிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இது குறித்து அரசிடம் கேட்டு பதில் அளிக்குமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியனிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வெள்ளிக்கிழமை பிற்பகல் நீதிமன்றம் கூடியதும் பதில் அளித்த செல்லப்பாண்டியன் சென்னையில் இருந்து தற்போது 3000 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்தார். 

வெள்ள நிவாரணம் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருவதாகவும், அதில் இலவச பேருந்து குறித்த கோரிக்கையும் விவாதிக்கப்படும் என போக்குவரத்து செயலாளர் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனைக் கேட்ட நீதிபதிகள் இலவச பேருந்து குறித்த உயர்மட்டக் குழுவின் முடிவை விரைவில் எடுக்க வேண்டும் எனவும் முடிந்தால் இன்றே எடுக்க வேண்டும் எனவும் அட்வகேட் ஜெனரலிடம் அறிவுறுத்தினர். 

இதனையடுத்து உடனடியாக சனிக்கிழமை முதல் டிசம்பர் 8ம் தேதிவரை இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings