சீனப் பயணி ஒருவர் தனது பையில் இரண்டு வெடிகுண்டுகளை வைத்திருப்பதாக வேடிக்கையாகக் கூறியது நீதிமன்றம் வரை சென்று, தற்போது அவருக்கு 5 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
செங் ஹாவ் (வயது 38) என்ற சீன நாட்டவருக்கு இன்று மலேசிய நீதிமன்றத்தில், குற்றவியல் சட்டம் பிரிவு 506-ன் கீழ், மிரட்டல் குற்றம் புரிந்ததாகக் கூறி இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட சீனா ஏர் விமானம் CA872-ல் பயணம் செய்த அந்த ஆடவர், அதிகாலை 12.20 மணியளவில் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
பெட்டி ஏன் இவ்வளவு கணமாக இருக்கிறது? என்று விமானப் பணியாளர் கேட்டதற்கு, தான் அதில் இரண்டு வெடிகுண்டுகளை வைத்திருப்பதாக விளையாட்டாகக் கூறியுள்ளார்.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், “அது ஒரு அப்பாவித் தனமான மற்றும் சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு” என்று வர்ணித்து அவருக்கு இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
நீதிபதில் ஷாரிஃபா முகைமின் அப்துல் காலிப், குற்றவாளி ஹாவுக்கு 5 நாட்கள் சிறைத் தண்டனையோடு, 7,000 ரிங்கிட் அப்ராதமும் விதித்துள்ளார்.
அதை செலுத்தத் தவறினால் 5 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.