பெங்களூரில் 29 வயது பெண், அவரது வருங்கால கணவர் மற்றும் நண்பரை குடிபோதையில் இருந்த பெண் உள்பட 5 பேர் சேர்ந்து தாக்கி யுள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் எதற்காக வெளியே வந்தீர்கள் என்று கூறி தாக்கி யுள்ளனர். பெங்களூரில் பணியாற்றி வருபவர் திவ்யா(பெயர் மாற்றப் பட்டுள்ளது).
அவர் தனது வருங்கால கணவர், நண்பர் ஆகியோருடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகையில் குடிபோதையில் இருந்த பெண் உள்பட 5 பேர் அவர்களை தாக்கி யுள்ளனர்.
இது குறித்து திவ்யா கூறுகையில், நான் என்னுடைய வருங்கால கணவர், நண்பருடன் வியாபாரம் குறித்து பேச பிரபல உணவக உரிமையாளரை சந்திக்க ஹெச்ஆர்பிஆர் லேஅவுட்டுக்கு சென்றோம்.
எங்கள் வீடுகளுக்கு அருகே அவரது வீடு இருந்ததால் எங்கள் வாகனங்களில் செல்லவில்லை. இரவு 1.40 மணி அளவில் நாங்கள் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.
அப்போது சிவுப்பு நிற ஹோண்டா ஆக்டிவாவில் குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்து இந்த நேரத்தில் நாங்கள் எதற்காக வெளியே வந்தோம் என்று கேட்டனர்.
பின்னர் எங்களை பார்த்து அவர்கள் அசிங்கமாக பேசினர். நாங்கள் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினோம். ஆட்டோ டிரைவரோ எங்களுக்கு உதவாமல் அங்கிருந்து ஓடி விட்டார்.
என் வருங்கால கணவரை அந்த 2 பேரும் முகத்திலேயே குத்தினர். சில நிமிடங்களில் ஒரு காரில் குடிபோதையில் ஒரு இளம் பெண் மற்றும் 2 வாலிபர்கள் வந்தனர்.
அந்த 3 பேரும் காரில் இருந்து இறங்கி வந்து எங்களை தாக்கினர். இரவில் இந்த நகரம் பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்று தெரிந்தும் ஏன் வெளியே வந்தாய் என்று கூறி அந்த பெண் என்னை தாக்கினார்.
வாலிபர்கள் என் வருங்கால கணவர் மற்றும் நண்பரை தாக்கினர். எனக்கு ரத்தம் வரத் துவங்கியதும் அவர்கள் தப்பியோடி விட்டனர்.
இரு சக்கர வாகனத்தின் கடைசி 4 எழுத்துக்கள் நினைவில் உள்ளது. ஆனால் இருட்டாக இருந்ததால் காரின் எண்ணை பார்க்க முடியவில்லை. அவர்கள் கன்னடத்தில் பேசினார்கள்.
கல்யாண் நகரைச் சேர்ந்தவர்கள் போன்று. ஒரு பெண் என்னை அடிப்பார் என நினைக்க வில்லை. தற்போது நாங்கள் நலமாக உள்ளோம்.
மறுநாள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா உள்ளதா என்று பார்த்தோம். ஆனால் ஒரு கேமரா கூட இல்லை என்றார்.
அவர்களை தாக்கியவர்கள் உள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் போன்று தெரிகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த 3 பேரையும் தாக்கியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.