மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரில் நோயகள் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுகக்கு வழங்கப்படவிருக்கும் நிவாரண உதவிகள் குறித்து ஒரு விரிவான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் சில உதவிகள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய் பரவுவதை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும்
தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். இவை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும்.
இதன்படி 2,000 டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மேலும், சுகாதாரத் துறையால் தற்போது நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் முதல்வர் ஜெயலலிதா.