வாஷிங்டன், அமெரிக்காவில் லாட்டரி சீட்டு விற்ற இந்தியருக்கு ரூ.6¾ கோடி பரிசு கிடைத்தது. ஒருவருக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டால், அது கூரையைப் பிய்த்துக் கொண்டு வரும் என வேடிக்கையாக சொல்வது உண்டு.
இது உண்மை தான் என சொல்ல வைக்கிறது, அமெரிக்காவில் நடந்துள்ள ஒரு சம்பவம்.
லாட்டரி விற்கும் இந்தியர்
அங்கு கலிபோர்னியா மாகாணத்தில், சைனோல்ஸ் என்ற இடத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள் கடை நடத்தி வருபவர், பல்பீர் அத்வால். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இவர் தனது கடையில் லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்து வந்தார்.
ஜாக்பாட் பரிசு
இந்த நிலையில் அங்கு 1.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 ஆயிரத்து 720 கோடி) ஜாக்பாட் பரிசுகளுக்கான லாட்டரி குலுக்கல் நடைபெற்றது.
இந்த குலுக்கலுக்கான பரிசு சீட்டுகளை பல்பீர் அத்வால் விற்பனை செய்து வந்தார்.
அதில் ஒரு டிக்கெட்டுக்கு ஜாக்பாட் பரிசு அடித்துள்ளது.
அந்த பரிசு சீட்டை விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் என்ற வகையில், அவருக்கு 10 லட்சம் டாலர் பரிசு (சுமார் ரூ.6¾ கோடி) போனசாக வழங்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகைக்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டு விட்டது.
‘பரிசை பகிர்வேன்’
இது பல்பீர் அத்வாலை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனது கடையில் விற்பனையான ஒரு லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது என்ற தகவல், என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
என்னால் அதை முதலில் நம்ப முடியவில்லை. பின்னர் கவனமுடன் பார்த்து உறுதி செய்தேன்.
எனது குடும்பம் பெரிய குடும்பம்.
எனக்கு கிடைத்துள்ள போனஸ் தொகையில் ஒரு பகுதியை அறப்பணிகளுக்காக கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.
மீதியை என் குடும்பத்தினருடனும், ஊழியர்களுடனும் பகிர்ந்து கொள்வேன். அமெரிக்கா, வாய்ப்புகளின் தேசம்.
இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தங்கள் கனவுகளை நனவாக்கி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கொண்டாட்டம்
பல்பீர் அத்வால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 1980-களில் அமெரிக்காவில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தந்தை 100 சதவீதம் இந்த பரிசுக்கு தகுதியானவர் என்று அவரது மகள் சோனியா அத்வால் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பல்பீர் அத்வாலுக்கு பரிசு கிடைத்த வெற்றியை கொண்டாட அந்த நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கூடி விட்டனராம்.