கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் !

கும்பகோணத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மகாமக விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு மகாமககுளம், நாகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சூரியபுஷ்கரணி,
வியாழசோமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சந்திரபுஷ்கரணி, பொற்றாமரை குளம் மற்றும் காவிரி ஆறு என 5 தீர்த்தங்கள் முக்கியமாக கூறப்படுகிறது.

அத்துடன் மகாமக விழாவிற்கு நேரிடையாக தொடர்புடைய சிவன் கோவில் களில் ஒன்றாக நாகேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

இந்த கோவிலின் தெற்கு புறத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சூரியபுஷ்கரணி (குளம்) அமைந்திருந்தது. அந்த குளத்தை ஆக்கிரமித்து 41 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடு கட்டி குடியிருந்து வந்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்நிலையில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி இந்தகோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை ஜனவரி 8-ந் தேதிக்குள் அகற்றி இடத்தை காலி செய்து தர வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சம்பந்தப்பட்டவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

ஆனால் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை காலி செய்து கொடுக்காததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர்கள் ஞானசேகரன், மாரியப்பன், தாசில்தார் பிரபாகரன்,

கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேற்று காலை வந்தனர். பின்னர் அவர்களுடைய முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அங்கு வசித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
Privacy and cookie settings