துப்பறியும் பெண் !

நான்கு ஆண்டுகளாக சென்னையில் உள்ள டிடெக்டிவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஃப்ரீ லேன்ஸராக கோயம்புத்தூரில் துப்பறியும் பணி செய்து வந்தார் யாஸ்மின். 
கடந்த ஆறுமாதங்களாக, தான் பணி செய்து வந்த துப்பறியும் நிபுணரிடம் இருந்து பிரான்செய்ஸ் பெற்று சொந்தமாக அலுவலகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். தற்பொழுது இவரின் கீழ் 60 நபர்கள் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் அலுவல் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டது…

இருபது ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷனில் “துப்பறியும் சோழன்’ என்ற தொடர் ஒளிபரப்பானது. அதைப் பார்த்ததிலிருந்து எனக்குத் துப்பறியும் நிபுணராக வேண்டும் என்று ஆழ்மனதில் பதிந்துவிட்டது. 

வளர்ந்த பிறகு எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் மர்ம நாவல்களை விரும்பிப் படிப்பேன். இது மேலும் என் துப்பறியும் ஆசையைத் தூண்டிவிட்டது. ஆனால், எனக்குத் திருமணம் ஆகும் வரை அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

திருமணத்திற்குப் பிறகு ஒரு விழாவில் பிரபல துப்பறியும் நிபுணர் குலோத்துங்க சோழனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் அளித்த ஊக்கத்தின்பேரில் என் கணவரிடம் ஆசையைத் தெரிவித்தேன். 

அவரும், என் குடும்பத்தாரும் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அனுமதி தர மறுத்தார்கள். இருந்தாலும் ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு, மிகவும் சிரமப்பட்டு அனுமதி வாங்கினேன். இப்போது என் இரண்டு குழந்தைகள் உட்பட அனைவரும் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

ஃப்ரீ லேன்ஸராக இருந்ததிலிருந்து இதுவரை 120 கேஸ்கள் வரை முடித்துக் கொடுத்திருக்கிறேன். நான் பெண்ணாக இருப்பதால் சிலர் மனம் திறந்து தங்கள் நெருக்கடிகளைத் தெரிவிக்கிறார்கள். 

ரொம்ப சுலபமாக என்னை அணுகுகிறார்கள். காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பது, கல்யாணத்திற்காக மணப்பெண்ணையோ அல்லது மாப்பிள்ளையையோ பற்றிய தகவல் அறிந்து சொல்வது, 

காதலில் ஏமாற்றப்பட்டவர்களுக்குத் தடயங்களைச் சேகரித்துக் கொடுப்பது, திருட்டுப்போன பொருட்களை மீட்டுக் கொடுப்பது, கணவரால் ஏமாற்றப்படும் பெண்களுக்குத் துப்புக் கொடுப்பது போன்றவற்றிற்காகத் துப்பறிந்து கொடுக்கிறோம். 

இந்த ஒவ்வொரு விஷயங்களும் மிக மிக ஜாக்கிரதையாகக் கையாண்டு, ஒருவரைப் பற்றி விசாரிக்கும்பொழுது அது அவர்களுக்கே தெரியாத ரகசியமாகப் பாதுகாக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிக தைரியசாலிகளாக இருக்கிறார்கள். அதுவே சில நேரங்களில் சிக்கலாகிவிடுகிறது. எங்களிடம் வரும் கேஸ்களில் பெரும்பாலும் பெண்கள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

அதிலும் இன்றைய சூழலில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் இளம் பெண்கள் காதல் என்ற பெயரில் சக மாணவர்களிடம் ஏமாந்து தவிக்கும் கேஸ்கள் அதிகமாக வருகின்றன. 

அதேபோல, திருமணத்திற்குப் பிறகு கணவனால் ஏமாற்றப்படும் பெண்களும் நிறைய உண்டு. சவாலான கேஸ் என்றால் அது மிஸ்ஸிங் கேஸ்தான்.

நான்கு, ஐந்து வருடத்திற்கு முன்பு காணாமல்போய் இருப்பார்கள். அவர்களைத் தேடி அலைந்து கண்டுபிடிக்க முடியாமல், கடைசியாக எங்களிடம் வருவார்கள். 

அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுப்பது மிகவும் சவாலாக இருக்கும். என்னைப் பொருத்தவரை இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும் தற்காப்புக் கலை ஒன்றை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். 

தக்க பாதுகாப்பு இல்லாமல் தேவையில்லாமல் இரவு நேரங்களில் தனியே பயணம் செய்யக்கூடாது. எல்லை மீறிய தைரியத்துடனும் இருக்கக் கூடாது.

இந்தத் துறையைப் பொருத்தவரை ரிஸ்க் அதிகம் என்பதால் என் மீது அக்கறையுள்ள அனைவருமே என் பாதுகாப்பு குறித்து பயப்படுகிறார்கள், ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள். 

பொதுவாக வேலைக்கு என்று பெண்கள் வந்துவிட்டால் ஆபத்து இல்லாத துறை எதுவுமே இல்லை. அதில் எங்களுக்குக் கொஞ்சம் கூடுதலான ஆபத்து இருக்கும். 
நேரம் காலம் இல்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பாடு, தூக்கம் இல்லாமல் இருக்கும். சில கேஸ்களில் நிறைய மிரட்டல்களும் வரும். கொஞ்சம் அளவு கடந்த தைரியத்துடன் அதைச் சமாளித்து வருகிறேன். 

இருந்தாலும், இரவு நேரங்களில் பயணிக்க நேர்ந்தால் பாதுகாப்பு இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அதேசமயத்தில் ரொம்பவும் அதிக ரிஸ்க் இருந்தால் அதைத் தவிர்த்துவிடுவேன்.

ஒவ்வொரு கேஸுக்கும் 4-5 பேர் இணைந்து குழுவாகச் செயல்படுகிறோம். பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும், உதவி கேட்டு எங்களைத் தொடர்பு கொள்பவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்வதும், 

துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தீர்வாக இருப்பது மனதிற்கு நிறைவாகவும், திருப்தியாகவும் இருக்கிறது” என்றார்.
Tags:
Privacy and cookie settings