ராதிகா ஆப்தே. லேடி கபாலி. கபாலி ஷூட்டிங்கிற்காக, மலேசியா, கோவா என மாறி மாறிப் பறந்து கொண்டிருந்தவரை நீண்ட துரத்தல்களுக்குப் பிறகு, அலை பேசியில் பிடித்தோம்.
கபாலி….
ரஜினி சாருடன் நடிக்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது…. இந்தியாவிலுள்ள எல்லா நடிகைகளும் ரஜினி சாருடன் நடிக்க முயற்சித்திருப்பார்கள்.
ஆனால், நான் எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை. கபாலி அதுவாக என்னைத் தேடி வந்தது. அதுதான் உண்மை.
எப்படித் தேடி வந்தது?
நான் நடித்த “பதலாப்பூர்’, “ஹன்ட்டர்’ ஆகிய படங்களை இயக்குநர் பா.ரஞ்சித் பார்த்திருக்கிறார்.
ரஞ்சித் என்னிடம் போனில் பேசிய போது, யாரோ விளையாடுகிறார்கள் என நினைத்து இணைப்பைத் துண்டித்தேன். அது பெரிய காமெடி. (சிரிக்கிறார்).
நீங்கள் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கிறதே… ஒரே உணவை தொடர்ந்து உட்கொண்டால் சலித்து விடும்.
சினிமாவும் அப்படித் தான். நான் எப்படிப்பட்ட சினிமாக்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அப்படிப்பட்ட படங்களில் தான் நடிக்கவும் விரும்புகிறேன்.
நாலு பாட்டு, நாலு ஃபைட் என ஒரேமாதிரி எத்தனை படங்களைத் தான் பார்க்க முடியும்…. அது தான் “பதலாப்பூர்’ போன்ற வித்தியாசமான படங்களை முயற்சி செய்கிறேன்.
நிறையக் குறும்படங்களிலும் நடிக்கிறீர்களே…
எல்லாமே சினிமாதான். இரண்டரை மணி நேரத்தில் சொல்லும் கதையை, குறும் படங்களில், வெறும் 15 நிமிடங்களில் சொல்கிறார்கள். சினிமாவை விட குறும்படத்தில் தான் புத்திசாலித்தனம் அதிகமாக வெளிப்படும்.
சுஜே ஹோஷ் இயக்கத்தில் நீங்கள் நடித்த “அகல்யா’ குறும்படம் இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்துமென எதிர்பார்தீர்களா?
சுஜேயை நீண்ட நாட்களாகத் தெரியும். ஒரு நாள் கல்கத்தா செல்கிறேன், வர முடியுமா என்றார். சென்றேன். வெறும் இரண்டு நாட்கள் தான் படமாக்கினோம்.
மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என நினைத்துப் பார்க்கவில்லை. உலக அளவில் பாராட்டை வாங்கிக் கொடுத்த படம்.
ராதிகா ஆப்தே என இணையத்தில் தேடினால், ராதிகா ஆப்தே ஹாட் என்று முதலில் வருகிறதே…
(சிரிக்கிறார்). இந்தியாவில் அழகாக இருந்தாலே, ஹாட்டாக இருப்பதாகத் தான் சொல்கிறார்கள். அழகுக்கான இன்னொரு பெயர் தான் ஹாட் என்றாகி விட்டது.
இன்னொரு ஹீரோயினின் பெயரைக் கூட கூகுளில் தேடிப்பாருங்கள். ஹாட் என்பது தான் முதலில் வரும். அழகை ரசிக்கிறார்கள் என எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
சரி உங்கள் பார்வையில் ஹாட் என்றால் என்ன?
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருமே, யாராவது ஒருவரின் கண்களுக்கு பேரழகர்களாகத் தெரிவோம். இதுதான் உண்மை.
என்னைப் பொருத்த வரைக்கும் அழகு என்பது இன்னர் பியூட்டி. மனசு அழகாக இருக்க வேண்டும். புற அழகைப் புறக்கணிக்கலாம்.
பல வருடங்களுக்கு முன்பாகவே தெலுங்கு “ரக்த சரித்திரா’வில் நடித்திருந்தாலும், “பதலாப்பூர்’ மூலமாகத் தானே, உங்களை ஹிந்தி ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள்…
“ரக்த சரித்திரா’ என் வாழ்வில் நடந்த அற்புதமான விஷயம். அது முடித்தவுடன், டான்ஸ் கற்க லண்டன் சென்று விட்டேன்.
இரண்டு வருடங்கள் நான் இந்தியாவிலேயே இல்லை. “பதலாப்பூர்’ படத்துக்காக வெறும் ஆறு நாட்கள் தான் ஷூட்டிங் சென்றேன். இயக்குநர் ஸ்ரீ ராம் ராகவன் செய்த மாஜிக் படம் அற்புதமாக வந்தது.
உங்களின் நடன ஆர்வம் மிகவும் பிரசித்தமாக உள்ளதே…
டான்ஸின் மீது ஏன் காதல் வந்தது என்பதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை. எனது அப்பா, அம்மா இருவருமே டாக்டர்கள், வீட்டில் டான்ஸ் பார்ப்பதற்கான சூழலோ, இல்லை டான்ஸ் கற்றுக் கொள்வதற்கான சூழலோ இல்லை.
இருந்தாலும் டான்ஸ் என்னை மயக்கிப் போட்டது. காரணம் தெரியாமலே லண்டன் வரை சென்று டான்ஸ் படித்து வந்தேன்.
இப்போது கூட நடனத்தின் ஏதாவது ஒரு வகையைக் கற்றுக் கொள்ள, உலகத்தின் எந்த மூலைக்கும் பயணம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறீர்களே…
சினிமா என்ற கலைக்கு மொழி இல்லை என நம்புபவள் நான். மராத்திப் பெண் என்பதனால் எனது முதல் படம் மராத்தியில் அமைந்தது.
பின்பு வங்காளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அமைந்தது. மனதுக்குப் பிடித்திருக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்பதில் தெளிவாக இருக்கிறேன்
உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?
ஆமாம், நான் திருமணமானவள்தான். திருமணமாகி மூன்று வருடங்களாகி விட்டது. எனது கணவர் பெயர் பெனடிக் டெயிலர்.
லண்டனைச் சேர்ந்தவர். பிரபல வயலினிஸ்ட். இதைச் சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை.
சினிமா எனபது எனது தொழில், நடிகையாக இருப்பதற்கு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது என்ன கட்டாயமா… திருமணம் செய்து கொண்டதை வெளியில் சொன்னால், பட வாய்ப்புகள் கிடைக்காது,
நடிகர்கள் உன்னுடன் நடிக்கத் தயங்குவார்கள் என்று பயமுறுத்தினார்கள். ஆனால், “கபாலி’ வாய்ப்பு எனக்குக் கிடைக்க வில்லையா… ரஜினியை விடப் பெரிய ஹீரோ யாராவது இங்கு உண்டா என்ன..?
ரஜினி…
அற்புதமான மனிதர். அவரைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. எனக்கு நேரமும் உங்களுக்குப் பக்கங்களும் போதாது.