திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி படத்திலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு : ‘நான் 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்.
இது என்னுடைய அதிர்ஷ்டம். தினமும் புதுமுக நடிகைகள் நிறையபேர் வருகிறார்கள் ரசிகர்களும் புதிய நடிகைகளை ரசிக்கிறார்கள். இவர்கள் மத்தியில் இத்தனை காலம் நீடித்து இருப்பது சாதாரணமானது அல்ல.
இன்றைக்கும் நான் கதாநாயகியாக நடிப்பதை ரசிகர்கள் விரும்புவதால் தான் வாய்ப்புகள் வருகின்றன. என்னை மனதில் வைத்து கதை, கதாபாத்திரங்களை உருவாக்குகிறார்கள்.
இது பெருமையாக இருக்கிறது. காதல், நகைச்சுவை, குடும்ப உறவு என பல கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன்.
ஆனாலும் எனக்கு பயமாக இருப்பது நடனம். பாடல் காட்சிகளில் நடனம் ஆட வேண்டும் என்று அழைக்கும் போதெல்லாம் மனதில் உதறல் எடுக்கும்.
பாடலுக்கு நடனம் ஆடுவது என்பது மற்ற நடிப்பு போல எளிதானது அல்ல. பாடல் காட்சிகளில் உதடு அசைய வேண்டும். கைகால்கள் ஆட வேண்டும் முகபாவங்களும் நடனத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
இத்தனையும் ஒரே நேரத்தில் சரியாக இருந்தால் தான் காட்சி நன்றாக வரும். எனவே நடனம் ஆட அழைக்கும் போதெல்லாம் முதல் படத்தில் ஆடும் போது எப்படி பயந்தேனோ அதே பயம் இப்போதும் வருகிறது.
மாதத்தில் 3 வாரங்கள் மட்டுமே நடிக்கிறேன். மற்ற நாட்களை ஓய்வுக்கு ஒதுக்குகிறேன். மே, டிசம்பர் மாதங்களில் தோழிகளுடன் வெளிநாடுகளை சுற்றிப் பார்க்க போவதை வழக்கமாக வைத்து இருக்கிறேன்.
இரவு பகலாக படப்பிடிப்புகளில் பங்கேற்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள இதுபோன்ற ஓய்வுகள் தேவைப்படுகிறது.
சாப்பாடு விஷயங்களில் எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. நான் ஒரு சாப்பாட்டு பிரியை. சாக்லேட் என்றால் ரொம்ப இஷ்டம். சமைக்க தெரியாது.
நூடுல்ஸ் மட்டும் பண்ணுவேன். காய்கறி கூட்டு, பருப்பு குழம்பும் சமைக்க தெரியும்.
எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் ஒல்லியாக இருப்பதற்கு எனது ஜீன் காரணம். யோகா, தியானம் போன்றவைகளை தவறாமல் பண்ணுகிறேன்.
அதுவும் நான் மெலிந்து இருப்பதற்கு காரணம். நாகரிகத்துக்கு ஏற்றார் போல் பேஷன் உலகத்துக்கு நான் மாற மாட்டேன். எனது உடல் வாகுக்கு என்ன ஆடை சவுகரியமாக இருக்கிறதோ அதையே அணிகிறேன்.
ஜீன்ஸ், டீசர்ட் விரும்பி அணிவேன். இப்போது அதிகமாக புடவை அணிய ஆரம்பித்து இருக்கிறேன்.
நான் சாப்பாட்டு பிரியை என்பதால் எதிர் காலத்தில் ஓட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது லட்சியமாக இருக்கிறது. அதற்கான நேரம் வரும்போது ஓட்டல் தொடங்குவேன்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது எனது சித்தாந்தம்.
இன்பத்தையும் துன்பத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் நம்மை விட்டு அகலாது. இவ்வாறு திரிஷா கூறினார்.