பொங்கலுக்கு வண்டலூருக்கு கரும்பு கொண்டு செல்ல தடை !

காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பூங்காவுக்கும் கரும்பு, மது, சிகரெட் மற்றும் பாலிதீன் பைகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் பூங்கா நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்காக காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாநகர போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார வாரியம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் கடந் த 31 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது துறைவாரியாக மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் பார்வையாளர்களை ஓழுங்குப்படுத்தவும், வாகனங்களின் நெரிசலை சரிசெய்யவும் தேவையான இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்பாராத தீ சம்பவங்களைத் தடுக்கும்பொருட்டு தீயணைப்பு பணியாளர்களுடன் தீயணைப்பு வாகனம் ஒன்று காணும் பொங்கல் அன்று தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு எதிர்பாராத வகையில் ஏற்படும் உடல் நலக் குறைவு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக மருத்துவக் குழு ஒன்று காணும் பொங்கல் அன்று ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பார்வையாளர்களுக்கு நான்கு லட்சம் லிட்டர் பாலாறு குடிநீர் வழங்கப்படவுள்ளது.

பார்வையாளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளைச் செய்யும்பொருட்டு மாநகர போக்குவரத்து மூலம் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணும் பொங்கல் அன்று தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஜனவரி 15, 16, 17 ஆகிய நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பூங்கா நுழைவுச்சீட்டு வழங்கப்படும். பொதுமக்கள் நெருக்கடியின்றி நுழைவுச்சீட்டு பெறுவதற்காக இருபது நுழைவுச்சீட்டு மையங்கள் உரிய தடுப்புவேலிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசல் மற்றும் சமூக விரோத செயல்களைக் கண்காணிக்க பார்வையாளர்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ருத்தப்பட்டுள்ளன. மேலும் வனத்துறை மற்றும் காவல் துறையைச் சார்ந்த பணியாளர்கள் சாதாரண உடையிலும் சீருடையிலும் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் வன மண்டலங்களிலிருந்து 130-க்கும் மேற்பட்ட வனத்துறைப் பணியாளர்கள், சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.

ஒரே நேரத்தில் 1500-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்குப் பரந்த வாகன நிறுத்துமிடம் வசதி இப்பூங்காவில் உள்ளதால் பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளலாம்.

பூங்காவில் ஏற்கனவே உள்ள பதின்மூன்று குடிநீர் தொட்டிகளுடன், கூடுதலாக 25 இடங்களில் 50 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவேகனந்தா கல்லூரி, லயோலா கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, தாகூர் பொறியியல் கல்லூரி, பாலாஜி பாலிடெக்னிக் கல்லூரி போன்ற கல்லூரிகளிலிருந்து பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மாணவர்கள், தேசிய மாணவர் படையைச் சார்ந்த மாணவர்கள், நாட்டு நலப்பணி மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


பூங்கா விலங்குகளுக்குப் பார்வையாளர்கள் உணவளிப்பதைத் தவிர்க்கும்பொருட்டு விலங்கு இருப்பிட பகுதிகளுக்குள் உணவுப் பண்டங்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் ஆகியவை கொண்டு செல்ல அனுமதி இல்லை. இவற்றைப் பொருட்கள் வைப்பறையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.

இதற்குக் கட்டணம் ஏதும் இல்லை. பார்வையாளர்கள் கொண்டுவரும் உணவுகளை, பொருட்கள் வைப்பறை அருகில் உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட மதிய உணவு உண்ணுமிடத்தில் சாப்பிடலாம்.

பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மது, சிகரெட், கரும்பு மற்றும் பாலிதீன் பைகளை பூங்காவினுள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. மேற்படி பொருட்களை கொண்டுவரும் பார்வையாளர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings