என்னை நீக்க தமீமுன் அன்சாரிக்கு எந்த தகுதியும் இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
தமீமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவஹிருல்லா மற்றும் அஸ்லாம் பாஷா ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து ஜவாஹிருல்லா கூறுகையில், மனிதநேய மக்கள் கட்சியின் பெயரையோ, கட்சியின் கொடியையோ தமீமுன் அன்சாரி பயன்படுத்த எந்த தகுதியும் இல்லை.
தமீமுன் அன்சாரி பதவிக்காலம் கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி நடைபெற்ற தலைமை பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
கட்சியின் கட்டுப்பாடு, விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக 2 முறை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது எனது தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி முழு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது.
நாங்கள் தான் தொடர்ந்து கட்சி பெயரில் போராட்டம், பொதுக்குழு கூட்டம் நடத்தி இருக்கிறோம். வெறும் விளம்பரத்துக்காக இதை அவர் செய்கிறார். இவர்களுக்கு ஆதரவாளர்கள் யாரும் கிடையாது. இவர்களுக்கு மக்களிடமும் செல்வாக்கு இல்லை.
என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தகுதியும் அவருக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சிக்குள் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது.