விமான விபத்தில் நேதாஜி மரணம்... உண்மையில்லை மம்தா !

தைவான் விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காயமடைந்து உயிரிழந்ததாகக் கூறுவதில் உண்மையில்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. அவர் 1945ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் உயிரிழந்ததாக ஒரு தரப்பினரும், இல்லையில்லை அவர் அதற்குப் பின்னரும் உயிர் வாழ்ந்தார் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், நேதாஜி விமான விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து இங்கிலாந்து இணையதளமான போஸ்பைல்ஸ் தொடர்ந்து ஆவணங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தைவான் விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தான் நேதாஜி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நேதாஜியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர், 2 ஜப்பான் மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர், ஒரு தைவான் செவிலியர் ஆகிய 5 சாட்சியங்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், இத்தகவலை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், ‘நேதாஜி மரணம் பற்றிய உண்மை நிலையை வெளிகொண்டு வராமல் இருப்பது, நாட்டிற்கே அவமானம்' என்றார். 

மேலும், நேதாஜியின் சர்ச்சை பற்றி ரஷ்யா கூறிய கருத்துக்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என தெரிவித்த அவர், நாட்டின் தந்தை மகாத்மா காந்தி என்றால், நாட்டின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றும், அவரது இறுதிக் காலம் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் விருப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings