பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய தீவிரவாதிகளுடன் 4 - நாட்களாக நடந்த துப்பாக்கிச் சண்டை இன்று ( செவ்வாய்கிழமை ) அதிகாலை ஓய்ந்தது.
பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நேற்று 3-வது நாளாக என்கவுன்ட்டர் நீடித்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இன்னும் விமானப் படை தளத்தினுள் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனரா அல்லது சண்டை முழுமையாக முடிந்துவிட்டதா போன்ற கேள்விகளுக்கு ராணுவமோ, அரசோ பதில் தரவில்லை.
முன்னதாக திங்கள்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 4 தீவிரவாதிகள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரது சடலமும் கைப்பற்றப்படும் என்றார்.
இந்த பதில் அடிப்படையில் 6 தீவிரவாதிகள் விமானப் படை தளத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அனைவரையும் ராணுவத்தினர் வீழ்த்தியதாகவும் கருதப்படுகிறது.
தேடுதல் வேட்டை:
இதற்கிடையே, பதான்கோட் விமானப்படை தளத்தில் தொடர்ந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் விமானப் படை தளம் முழுமையாக பாதுகாப்புடன் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரை தேடுதல் வேட்டை தொடரும் என என்.எஸ்.ஜி படையின் ஐ.ஜி. மேஜர் ஜெனரல் துஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அறிவுறுத்தல்:
பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாதிகள் எனத் தெரிய வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் பார்வையிடுகிறார்:
பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், விமானப் படை தளபதி அரூப் ராஹா, ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் பதான்கோட் சென்று பார்வையிடுகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு மையங்கள் அனைத்திலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மனோகர் பரிக்கர் பதான்கோட் செல்வது குறிப்பிடத்தகது.