பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும் ரயில் போக்குவர்த்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பனிமூட்டத்தின் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர், அலுவலகம் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லூதியானா நகரில் 8 டிகிரி செல்வியஸ் வெப்பநிலை நேற்று பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் குளிரும், அடர்ந்த பனி மூட்டமும் நிலவி வருகிறது.
இது நேற்றும் தொடர்ந்தது. நேற்று காலையில் டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதைப்போல கடும் பனிமூட்டத்தால் காலை 5.30 மணியளவில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையே மக்களால் பார்க்க முடிந்தது.
இது 8.30 மணியளவில் 400 மீட்டராக அதிகரித்தது. இந்த பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்தது.
டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு வந்த 10 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.