தமிழகத்தில் இன்று முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல் தவணையாக 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் கட்டமாக இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,
சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை 5 மணி வரை இது நடைபெறும்.
ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை இடப்பட்டது.
அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக இன்று சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். இன்று காணும் பொங்கல் நாள் என்பதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கூட சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.